31 ஆகஸ்ட், 2015

புகழ் பாட வந்தோம் நாம் புவி வாழ்விலே!புகழ் பாட வந்தோம் நாம் புவி வாழ்விலே-எம்
பெருமானார் இறைத் தூதர் நபி மீதிலே 
புகழ் அனைத்தும் இறைவனுக்கே எனச் சொல்லியே \
அந்த இறைத்தூதர் புகழுக்கு ஈடு இணையில்லையே

தென்றலை நான் புகழ்கின்றேன் சுகம் தந்ததா- எழில் 
மென் மலரைப் புகழ்கின்றேன் மணம் வந்ததா?
எம் அருமை நபி தந்த சுகம் கொஞ்சமா?
நான் எதைச் சொல்லிப் புகழ்ந்திடுவேன் இறை யாஅல்லாஹ் 

வானுலகம் வலம் வந்த விதம் கூறவா?- உயர் 
மாமக்கம் வென்றடைந்த நயம் கூறவா?
தீன் நபி வாழ் மாமதினா எழில் கூறவா?-2
நான் எதைச் சொல்லிப் புகழ்ந்திடுவேன் இறை யாஅல்லாஹ் 

நேர்வழியை எமக்களித்த அருள் கூறவா?  வலி- 
-மார் வழியைத் துயரவைத்த பொருள் கூறவா?
ஓரிறையை உணர வைத்த முறை கூறவா?
நான் எதைக் கூறி இரசூலைப் புகழ்வேன் அல்லாஹ்!

எமக்காக இடர்பட்ட துயர் கூறவா?
அவர் தமக்காக வாழவில்லை மெய் சொல்லவா?
இறைக்காக எழுந்து வந்த முறை சொல்லவா?
நான் எதைச் சொல்லிப் புகழ்ந்திடுவேன் இறை யாஅல்லாஹ்! 

கார்மேகம் குடை பிடித்த கதை சொல்லவா? -அவர் 
போர்முனையில் துயர் கண்ட நிலை சொல்லவா
யார் நமக்கு மஹ்ஷரிலே துணை... சொல்லவா?
நான் எதைச் சொல்லிப் புகழ் பாட வந்தேன் அல்லாஹ்!


இக வாழ்வை எளிதாக்கித் தரும் மாநபி- பெரும்
சுக வாழ்வை மறுவாழ்வில் தரும் மாநபி
அகம் புறமும் அலங்கரிக்கும் ஒளி மாநபி 
நான் எதைச் சொல்லிப் புகழ்ப் பாடி முடிப்பேன் அல்லாஹ்!

அகிலத்தை ரஹ்மத்தால் சூழ்ந்தார் நபி - தம்
உம்மத்தை ஒருபோதும் மறவா நபி 
புகழ் பாடி முடியாத புகழ் மாநபி-அந்த
நபி மீது சலவாத்தைப் பொழிவாய் அல்லாஹ்!