23 ஜூலை, 2014

மனித நேயம் வாழ்கிறது-1

                           -உஸ்தாத் காதிர் மீரான் மஸ்லஹி 
ஆரம்பமாக மின்னல் F.M நேயர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிகவும் மகிழ்சியடைகிறேன்.
இந்த உலகத்தில் மனித நேயம் வாழ்கிறதா.... அல்லது வீழ்கிறதா என்றால் வாழ்கிறது என்பது தான் உண்மையான தெளிந்த சிந்தனையுடைய ஒரு பதிலாக இருக்கிறது.
இன்று உலக அளவில் ஆகஸ்டு 19.ம் தேதி  word humanitarian day ( WHD )  மனித நேய தினமாக கொண்டாப்படுகிறது.
இந்த உலகில் மானுடம் இருக்கும் வரை மனித நேயம் என்பது இருந்து கொண்டே இருக்கும். நெற்கதிர் விளையும் களத்தில் கதிர்களுக்கு இடையில் களைகள் இருப்பதை போல, அந்த காலம் முதல் இந்த நவீன காலம் வரை களைகளை போன்ற மனிதநேயத்திற்கு எதிரான காரியங்கள் நிகழ்ந்தாலும் மனிதநேயம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்று பத்திரிக்கை துறையும் மீடியாக்களும் ஆங்காங்கே நடக்கின்ற  மனிதநேயத்திற்கு எதிரான காரியங்களை அதிகமாக சொல்வதால் மனித நேயம் வீழ்ந்து விட்டது என்பது போன்ற மாய தோற்றம் ஏற்படுகிறதே தவிர மனித நேயம் வீழ்நது விடவில்லை.

2004.ம் ஆண்டு டிசம்பர்.26.ம் தேதி நிகழ்ந்த அந்த சுனாமி பேரலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி மதம் நிறம் மொழி என்று வேறுபாடு பாக்காமல் தான் உபயோகித்து கொண்டிருந்த பணம், உடை, பொருள் என தங்களால் முடிந்த பொருள்களை ஏழைகளும் கூட அனுப்பினார்கள் என்றால் இது மனிதநேயம் வாழ்கிறது என்பதை காட்டுகிறதா...... அல்லது வீழ்கிறது என்பதை காட்டுகிறதா....

உலக பொதுமறையாம் அல்குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான்.
لن تنا لو البر حتى تنفقوا مما تحبون .
உனக்கு நீ எந்த ஒன்றை விரும்புகிறாயோ அந்த ஒன்றையே அடுத்தவர்களுக்கு நீ செலவு செய்யாதவரை நீ முழு நன்மையை அடைந்தவனாக ஆகமாட்டாய். அத்தியாயம்.3 வசனம்.92. ல் அல்லாஹ் கூறுகிறான்.
கடந்த ஜுன் மாதம் 28.ம் தேதி சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் தரைமட்டமான போது அந்த இடிபாடுகளை அப்புறப்படுத்த பலரும் உடனடியாக களத்தில் இறங்கினார்கள் இன்னும் சிலர் அந்த பணி தொய்வின்றி நடக்க வேண்டும் என்பதற்காக அதில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களுக்கு இடையில் டி, பிஸ்கட் சாப்பாடு போன்றவற்றை தங்கள் சொந்த செலவில் வாங்கி கொடுத்து அந்த பணியை ஊக்கப்படுத்தினார்கள் இது மனிதநேயம் வாழ்கிறது என்பதை காட்டுகிறதா.... அல்லது வீழ்கிறது என்பதை காட்டுகிறதா......

இலங்கை, பாலஸ்தீனம் போன்ற பகுதிகளில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது முகம் பார்க்காத அவர்களுக்காக போரை நிப்பாட்டும்படி உலகில் பலரும் இந்த நோன்பு மாதத்தில் வெயில் என்றும் கூட பாராமல் மாற்றுமத சகோதரர்கள் உள்பட பலரும் ஆர்ப்பாட்டம் செய்தார்களே அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தார்களே இது மனிதநேயம் வாழ்கிறது என்பதை காட்டுகிறதா.... அல்லது வீழ்கிறது என்பதை காட்டுகிறதா......

உலக நவீன கண்டுபிடிப்புகளுக்கு சவால் விட்ட நிகழ்வான நமது மலேசிய திருநாட்டினுடைய விமானம் 370 மாயமான பொழுது அதில் பயணம் செய்தவர்கள் மீண்டும் திரும்ப வேண்பதற்காக பலரும் தங்களது இறைவனிடம் அழுது கேட்டார்கள். பள்ளிவாசல்கள், கோயில்கள், சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றது இவைகளெல்லாம் மனிதநேயம் வாழ்கிறது என்பதை காட்டுகிறதா.... அல்லது வீழ்கிறது என்பதை காட்டுகிறதா......

உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள பில்கேட்ஸ் அவரிடத்தில் உங்களது ஆசை என்னவென்று கேட்கப்பட்ட பொழுது மலேரியாவை ஒழிக்க வேண்டும், கல்வியை சீரமைத்து ஏழைகளுக்கும் கல்வி கிடைக்க செய்ய வேண்டும், உயிர் கொல்லி ஆயுதமான ரசாயன அனு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்று கூறினார் அது மட்டுமல்ல சீனாவை சேர்ந்த 88 வயதான தொழில் அதிபர் பெங்னியான் தனது 12,000 கோடி சொத்தையும் அறக்கட்டளைக்கு உயில் எழுதி வைத்தார் என்ற இது போன்ற நிகழ்வுகளெல்லாம் மனிதநேயம் வாழ்கிறது என்பதை காட்டுகிறதா.... அல்லது வீழ்கிறது என்பதை காட்டுகிறதா......

இந்த மலேசியாவில் தங்கள் குடும்பத்தினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் பெற்றோர், மனைவி, மக்கள், என அனைவரையும் பிரிந்து தன் சுகத்தை தியாகம் செய்து இங்கு உழைத்து ஊருக்கு பணம் அனுப்பி கொண்டிருக்கும் அவர்களை பார்த்து நீங்கள் சொல்லுங்கள் மனிதநேயம் வாழ்கிறதா அல்லது வீழ்கிறதா..

தமிழ்நாட்டில் வானெலியில் பணியாற்றிய தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர் தனது அனுபவத்தை சொல்லும் போது ஒரு நாள் மாலை நேரத்தில் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் தலைமை டாக்டர் போனில் அருகில் இருந்த பாளையங்கோட்டையில் வடமாநிலத்தவர்கள் வந்த சுற்றுலா பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துவிட்டது இப்பொழுது அவர்களுக்கு உடனடியாக ரத்தம் தேவைபடுகிறது ரத்தம் கொடுப்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வரும் படி சொல்ல சொன்னார்கள் நாங்கள் உடனடியாக வானெலியில் தொடர்ந்து அறிவிப்பு செய்தோம். சரியாக இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் தலைமை டாக்டர் போன் செய்து தயவு செய்து ரத்த தானம் செய்ய மேற்கொண்டு யாரும் ஆஸ்பத்திரிக்கு வரவேண்டாம்னு சொல்லுங்க.... இங்க எங்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியல என்று போன் வந்தது என்று தன் அனுபவத்தை கூறினார்.


இன்றும் கூட இது போன்ற பொது அறிவிப்பை கேட்டு பலரும் தொண்டு செய்ய வருகிறார்கள் என்றால் இவைகளெல்லாம் மனிதநேயம் வீழவில்லை வாழ்கிறது என்பதை தான் காட்டுகிறது.