19 ஜனவரி, 2014

வறுமை வந்தால் வாடாதே! வசதி வந்தால் ஆடாதே!!

قال أبو حازم: من عرف الدنيا لم يفرح فيها برخاء ولم يحزن على بلوى.

இந்த துன்யாவின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர் செழுமையின் போது (அதிகம்) சிரிக்கவும் மாட்டார்; வறுமையின் போது வாடவும் மாட்டார்.                      - அறிஞர் அபூ ஹாஸிம் (ரஹ்)

வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் கதிர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் தங்கள் கப்பல் மூழ்கிவிட்டது என்று கூறப்பட்டபோதும் கலங்கவில்லை. அமைதியாக அல்ஹம்து லில்லாஹ் என்றார்கள். சிறிது நேரம் கழித்து
இல்லை.. இல்லை.. புயல் வந்தது உண்மைதான். ஆனால் ஓய்ந்துவிட்டது. கப்பல் நல்ல லாபத்தோடு பத்திரமாக திரும்பி வந்து கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டபோதும் அவர்கள் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கவில்லை. அமைதியாக அல்ஹம்து லில்லாஹ் கூறினார்கள். கரரணம் கேட்கப்பட்டபோது கூறினார்கள்:
மூழ்கிவிட்டது என்று சொல்லப்பட்டபோதும் நான் ஆழ்மனதை உற்றுப் பார்த்தேன். அதில் ஏதேனும் சலனம் பதட்டம் தெரிகிறதா? என்று. எந்த சலனமும் இன்றி உள்ளம் அமைதியாக அல்லாஹ்வை தியானித்துக் கொண்டிருந்தது. அல்ஹம்து லில்லாஹ் என்றேன்.
பத்திரமாக திரும்பி வந்துகொண்டிருக்கிறது என்று சொல்லப்பட்டபோதும்  நான் ஆழ்மனதை உற்றுப் பார்த்தேன். அதில் ஏதேனும் குஷியும் கும்மாளமும்  தெரிகிறதா? என்று. எந்த சலனமும் இன்றி உள்ளம் அமைதியாக அல்லாஹ்வை தியானித்துக் கொண்டிருந்தது. அல்ஹம்து லில்லாஹ் என்றேன். துன்பத்திலும் இன்பத்திலும் மனம் அமைதியான நிலையை அனுபவித்தால் அதுதான் ஞானிகளின் நிலை. 
அதைத்தான்  வல்ல ரஹ்மான் வான்மறையிலே  கூறுகிறான்:
அல்லாஹ்வின் அன்பர்கள் யார் தெரியுமா? அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் 
ஈஸா (அலை) அவர்களிடம் சீடர்கள் வினவினார்கள்: தாங்கள் கடலில் நடக்கிறீர்கள் நாங்களும் தங்களுடன்தான் இருக்கிறோம் எங்களுக்கு முடியவில்லையே தங்களுக்கு மட்டும் எப்படி இது முடிகிறது? 
நபி உடனே இரண்டு மண் குவியலைக் குவித்தார்கள். ஒன்றை நோக்கி அல்லாஹ்வின் உத்தரவால் தங்கமாக மாறு என்றார்கள். அது மாறியது. இன்னொன்றை மண் குவியலாகவே வைத்து இரண்டையும் இரு கையில் ஏந்தி சீடர்களே! இந்த இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறினால் நீங்கள் எதை விரும்பி எடுப்பீர்கள்? 
கண்டிப்பாக தங்கம்தான் எங்கள் விருப்பம்: என்று கூறி சீடர்கள் அதை நோக்கி பாய்ந்தனர். ஈஸா  அலை கூறினார்கள்: இதுதான் இந்த உலக ஆசைதான் நம் பலகீனம் என்னைப் பொருத்தவரைக்கும் இந்த இரண்டு குவியலும் ஒன்றுதான் இந்த இரண்டின் பக்கமும் என் மனம் சாயாது. உலகத்தின் ஆசையை நீங்கள் உள்ளத்திலிருந்து உதறினால் நீங்களும் கடலில் நடக்கலாம்; ஆகாயத்தில் மிதக்கலாம் என்றார்கள்.