11 ஆகஸ்ட், 2013

மனிதநேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா? -6


வீழ்கிறதே! 

வாழ்த்த வாயும் வணங்க தலையும்
தாழ்த்த நெஞ்சமும் தந்த எல்லாம் வல்ல இறையை சிந்தையில் வைத்து துவக்குகின்றேன்.

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு.
அவரைக்கு பூ அழகு. இந்த அவைக்கு அவைத்தலைவரான  நடுவர்  தான் அழகு.

இன்றைய சூழ்நிலையில் மனிதநேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?
வீழ்கிறதே... வீழ்கிறதே,.. வீழ்கிறதே என்ற எங்களது நடுவர்  அவர்களின் இறுதி தீர்ப்பான இனிய  தீர்ப்பை காது குளிரக் கேட்பதற்காக வேண்டி வருகைத் தந்திருக்கும்  நல்லோர்களான  வருங்கால நாதாக்களே!
சிங்க முகம் கொண்ட என் அணியினர்களான வீர சிங்கங்களே! அருபட இருக்கிற குர்பானிக் கிடாவைப் போல் முழித்துக்கொண்டிருக்கும் எதிர் அணியினர்களே!.
மீண்டும் ஒரு முறை என் உள்ளம் எனும் பள்ளத்திலிருந்து துள்ளி வரும் ஸலாமை தெரிவித்துக் கொள்கிறேன்.
     அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)

செத்துப்போன ஒரு மனிதனை எழுப்பி மனிதநேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா? என்று கேட்டால் கூட அவன் சொல்வான் மனிதநேயம் வாழ்ந்தால் நான் ஏன் வீழப் போகிறேன்? என்பான்.
ஆக நடுநிலைத்தவறாத நடுவர் அவர்களே மனிதநேயம் இன்று சமுதாயத்தில் குறைந்து வருகிறது.
  • அநீதி இழைப்பவர்களை சமூகம் அரவணைக்கிற காலம் இது.
  • யாரெல்லாம் சமுதாயத்திற்கு அநீதி இழைக்கிறார்களோ அவர்களை எல்லாம் தலைவர்களாக தேர்ந்தெடுக்கிற தரங்கெட்ட காலம் இது தருதலைகள் நிறைந்த காலம் இது.
  • மனிதநேயம் இல்லாமல் யார் வாழ்கிறார்களோ அவர்களை  அங்கீகரிக்கிற காலம் இது.

அது அரசியல் வட்டாரங்களாக இருக்கட்டும். பொதுத் துறைகளாக இருக்கட்டும் அநீதி இழைப்பவனுக்கு  சமூகம் உதவுகிறது.
ஒருவன் சென்று கொண்டிருந்தான். வாழைப்பழம் வழுக்கி கீழே விழ ஒருவன் தூக்க ஓட எனக்கு ஒன்றுமே இல்லை. என்று விழுந்தவன் சொல்கிறான். அப்பொழுது வாழைப்பழத் தோல் சொன்னதாம் அநியாயக்காரனுக்கு உதவுகிறாய் அநீதம் இழைக்கப்பட்டவன்; நான் என்னை  எடுத்து  ஒரு ஓரமாகப் போடக்கூடாதா?
மாநபி (ஸல்) மனிதநேயத்தை இரண்டு பிரிவாக அறிமுகம் செய்கிறார்கள். ஒன்று. முஸ்லீம்களோடு எப்படி நடக்க வேண்டும். இரண்டு. பிற மத சமுதாய மக்களோடு எப்படி மனித நேயப் பார்வையோடு நடக்க வேண்டும். என்று சுமார்  20 நிலைகளை  சொல்லித் தருகிறார்கள்.
அதில் ஒன்றாவது  இன்றைய காலத்தில் இருக்கிறதா என்பது  தான்  என் கேள்வி. அந்த இருபதில்  ஒன்று உள்ளம் சாந்தி  பெறுவது.  அதாவது  எல்லோரைப் பற்றியும் நல்எண்ணம்  கொள்வது.
     
நடுவர் அவர்களே!  
ஒரு  வாலிபன்  கடினமான முறையில்  தவம் செய்தான்.
அவனுக்கு  முன்னால்  ஒரு  அசரீதி கேட்டது. பக்தா! உன் பக்தியை  மெச்சினோம் நீ எது கேட்டாலும் நான் கொடுப்பேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ என்ன கேட்கின்றாயோ அதில் உனக்கு  ஒன்றாகவும், உன் அண்டை வீட்டாருக்கு இரண்டாகவும் கொடுப்பேன் என்றது. இவனுக்கு எதைக் கேட்பது என்றே புரியவில்லை. இறைவா! எனது ஒரு
கண்ணை எடுத்து விடு. என்றானாம் அப்பத்தானே பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கண் போகும் இது தான் இன்றைய நிலை நடுவர் அவர்களே!

ஒருவன் நல்லா இருந்து விட்டான் என்றால் அவன் காலைப் பிடித்து இழுத்து கப்ரில் வைக்கும் வரை இவனுக்கு தூக்கம் வராது. இன்று சண்டை நடந்தால் சமாதானப்படுத்துவதற்கு  ஆள் இல்லை. ஆக்ஸிடன்டில் அடிப்பட்டால்  காப்பாற்ற ஆளில்லை.
காக்காக்கூட அடிப்பட்டால் கா...கா... என்று கூவி தன் இனத்தையெல்லாம் ஒன்று  கூட்டுகிறது.
      
ஒரு காலம் இருந்தது. ஒவ்வொரு வீடுகளிலேயும் மக்கள் ஓய்வெடுப்பதற்காக   திண்ணை கட்டுவார்கள். இப்பொழுது என்ன என்றால்  வாசலிலேயே 'நாய்கள் ஜாக்கிரதை' என்றெல்லாம்  போர்ட்டு  எழுதி  வைக்கிறார்கள். இதாவது  பரவாயில்லை. ஒரு வீட்டில் 'பேய்கள் ஜாக்கிரதைஎன்று  எழுதி  வைத்திருந்தார்கள். என்னவென்று  விசாரித்துப் பார்ததால்  அந்த வீட்டுக்காரருக்கு 2 பொண்டாட்டிகளாம்.

மனிதநேயம்  வாழ்கிறது என்பதைப் பற்றி  எதிர் அணியில்  ஒரு  குழந்தை வந்திருக்கது. பாருங்க. அதற்கு  மனிதன்னா  என்னன்னு
தெரியுமா? நேயம்னா என்னன்னு  தெரியுமா' ஆனால் அதெல்லாம்  மனிதநேயம் பற்றி பேச வந்திருக்கு பாருங்க!!...
     
மற்ற வீடுகளிலாவது  யாரும் உட்காரக் கூடாதுன்னு தின்னையத்தான்  உள்ளே வைப்பார்கள்  பார்டி காரன் வீட்டையே உள்ள வைச்சுட்டான் இந்த  லட்சனத்துல மனித நேயத்தைப் பற்றி பேச வந்துட்டாங்க
     
எதிரணியினர் சொன்னார்கள் சுனாமியில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவவில்லையா? நிதி வழங்கவில்லையா? என்று எல்லாம் கேட்டனர். அருமையானவர்களே  பாதிக்கப்பட்டவரெல்லாம் கடலில் போய்விட்டனர். மீதம் இருந்தவர் ஒரு சில பேர் தான் அவரவர்கள் பெயரைச் சொல்லி அந்த பணத்தை எல்லாம் சுருட்டிச் சென்றவர் பலர் அதிலே அரசியல்வாதிகளும் பலர் சுனாமி  நிதி அதற்கு  உரித்தானவர்களிடம் போய் சேரவே இல்லை. என்பதே ஆய்வுகள்  தரும் தகவல் இப்ப சமீபத்தில் மழையிலே  பாதிக்கப்பட்டவர்களுக்கு  2000 ரூபாய்  கொடுக்கப்பட்டது.
      
எல்லா ஊரிலேயும் 200 ரூபாய்  200 ரூபாய் v.o. வுக்கு லஞ்சம் கொடுக்காமல் யாரும் அந்த பணத்தை வாங்க முடியவில்லை. எங்கே மனித நேயம் வாழ்கிறது.?
     
அரசாங்கம்  பாதிக்கப்பட்டவர்களுக்காக சுனாமி நிதி கொடுத்தால் மாடி வீட்டில் உள்ளவர்  அந்த மழையினுடைய  பாதிப்பை சிறிதும் கூட உணராமல் அந்த நிதி  உதவியை பெறுகிறார்களே . அது எப்படி ஹலால்

;
 ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த நிதி அதுவும்  கூட லஞ்சம் தான்.
      இன்று  ஆபிஸூக்கு உள்ளே  நாம் போகம்னா கூட Pull ன்னு  எழுதி இருப்பாங்க Pull ன்னா தள்ளுன்னு  அர்த்தம் ஆபிஸ்ல ஒரு  பைல் தள்ளனும்னா தள்ளுனா தான் கதை நடக்கும்.
      
எவ்வளவு  ஏழையாக இருந்தாலும் வறுமை கோட்டிற்கு கீழே வாடினாலும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாலும் அவனுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். என்றால்   லஞ்சம் கொடுக்காமல்  நடக்காது.
நபிகள் நாயகம்  (ஸல்) சொன்னார்கள் லஞ்சம் வாங்குபவனும், லஞ்சம் கொடுப்பவனும் நரகத்திலே இருப்பான் என்றார்களே!
ஆனால் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு இஸ்லாமியர்களாக இருந்தாலும்  லஞ்சம் வாங்குகிறார்கள்.
மேலும் எதிரணித் தலைவர்  சகோதரர்  பாவாஷா வந்தார் நாங்கள் பள்ளிவாசலுக்கு கொடுக்கலயா?
தர்காக்களுக்குக் கொடுக்கவில்லையாஇது போன்ற விழாக்களுக்கு கொடுக்கலயா? என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே  போனார்கள்.
     
அன்பு மிக்க சகோதரரைப் பார்த்து  நான் கேட்பேன். பள்ளிவாசலுக்கு முன்னால் ஏழைக் குமருகளுக்காக வேண்டி உங்கள் ஆதரவைக் கேட்டு நிற்கிறார்களே நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் அந்த ஏழைகளின்  வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா? அந்த ஏழைப் பெண்களை வரதட்ணை வாங்காமல் திருமணம் முடிக்க யாராவது முன் வந்திருக்கிறார்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு கவிஞன் இப்படிச் சொல்வான். தன் இச்சையை  தீர்த்துக் கொள்வதற்காக  வேண்டி பல விபச்சார பிச்சைக்காரிகளிடம் பல லட்சம் கொடுத்து தன் இச்சையை தீர்த்துக் கொள்ளும் இவன் ஊர் மெச்சிய பச்சைக் கிளியிடம் பிச்சை வாங்குவது முறையாஎன்று இன்றைய நடைமுறையை அழகாகச் சொல்வான்.
      
நடுவர் அவர்களே ஒரு பரம ஏழைச் சகோதரி திருமணம் முடிக்க வசதி இல்லாமல் ஏங்கி உறுகி, உறுகி மரணமாகிற நிலையை அடைந்து விடுகிறாள். மரணமாகிற அந்த நேரத்திலே அவள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
     
அண்ணா, என்னை அடக்கி விட்டால்  என்னுடைய கப்ரிலே உடனே மண்ணை தள்ளி விடாதே, ஏனென்றால் அன்று தான் அண்ணனா நான் புத்தாடை அணிந்திருக்கிறேன்.!
இது போல் எத்தனையோ சகோதரிகளின் ஏக்கம் - உங்களுக்கு நிம்மதியான தூக்கம்!

வரதட்சணை வாங்குபவர்களே! உங்களுக்கு இதயமே இல்லையா!
உங்களுக்கு இருப்பது கல்பா! கல்லா!
கல் கூட சிலசமயம் உருகுமே! அதை விடவாவா உம் கல்ப் மோசமாகி விட்டது.?

ஒரு செய்தியை  இந்தச் சபையில் ஆணித்தரமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

இஸ்லாம் கூறுகிற ஸக்காத்தை மாத்திரம் முறையாக ஏழை எளியோர்களுக்கு வினியோகிக்கப் பட்டிருந்தால் போதும்.

கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த உலகத்திலே வறுமை என்பது ஒளிக்கப்பட்டு இருக்கும்
மேலும் எதிரணித் தலைவர் பாவாஷா வந்தாரு மனிதநேயம் வாழ்கிறது. எனபதற்கு இல்லாத பொல்லாத கவிதைகளை எல்லாம் அடிச்சு விட்டாருஃ
இன்றைய காலத்திற்கு ஏற்ற கவிதையை நான் சொல்கிறேன். அது ஹக்கானது அதை சொல்கிறேன் கேளுங்க நடுவர் அவர்களே
     மனிதன்
     நிறத்துக்கு கூட சாயம் பூசுபவன்
     மதச் சாயம் பூசுபவன்
     பச்சை முஸ்லிமுக்காம்
     காவி ஹிந்துவுக்காம்
     வெள்ளை கிறுத்துவுக்காம்
     அவன் ஆகாயத்தைக் கூட விட்டு வைக்க வில்லை.
     அங்கும் பாகப் பிரிவினை
     பிறை ஒருவர்க்கு சூரியன் ஒருவர்க்கு
     இவ்விரண்டின் ஒளியும் மற்றொருவருக்கு

திசைப்பற்றிய அவனது தீர்ப்பைக் கேளுங்கள்
மேற்கு ஒருவர்க்கு
கிழக்கு  ஒருவர்க்கு
இயற்கையைக் கூட  இவன் பேடன்ட் செய்திருக்கிறான்
பேரீச்சை  ஒருவருக்கு
துளசி  ஒருவருக்கு


உண்ணும் உணவையாவது  - விட்டு  வைத்தானா?
ரொட்டி  சுண்டல் அப்பம்
அப்பப்பா ! போதும்  இந்தப்பிரிவினை
தாயும்  தகப்பனுமாய் ரெண்டு பேரும் சேர்ந்து ஆணும் பெண்ணுமான தன்னோட பத்துக் குழந்தைகளுக்கு  சோறு போட்டு  வளர்க்குறாங்க சிறு பிராயத்தில், ஆனா அந்த ரெண்டு  ஜூவன்களுக்கு  முதுமையில் இந்த பத்து பேரும்  சேர்ந்து  உணவு  தராம பட்டினி  போடும்  கொடுமையை  எந்த மனிதத்தில்  சேர்ப்பது?
      
ஃபைவ் ஸ்டார் ஒட்டலில் நண்பர்கள் சூழ பலவகையான அயிட்டங்களை  உள்ளே தள்ளிவிட்டு வெளியே வர்றப்ப ஃப்ரண்டுக்கு  முன்னாடி தன் இமேஜை உசத்திக் கொள்வதற்காக அதிகப்படியான பில்லை அலட்டிக் கொள்ளாமல் கொடுக்க முன் வருபவர்கள். அந்த ஒட்டலின் வாசலில் ஒரு ஒத்த ரூபா காசுக்காக கையேந்தும் ஏழைக் கரங்களை அலட்சியப்படுத்துகிறார்களே ஏன்?
வருடா வருடம் வீட்டை ஒட்டடை அடித்து சுவர்களுக்கு  சுண்ணாம்பு  பூசி உயர்தர பெயிண்ட் கலவையால் மெருகுபடுத்தி அழகுபார்க்கும் பலருக்கு  சொல்லப்போனால் சாலையோர மைல்கல்லுக்குக் கூட வருடம் தவறாமல் வர்ணம் பூசும் அரசுக்கு பிளாட்பார ஓரங்கள்ல  எண்ணையுமில்லாம
 துணியுமில்லாம குளிருக்கு  ஒருவரை இன்னொருவர் போர்வையாய்க் கருதி துயில் கொள்ளும் அனாதைப் பிஞ்சுகளை வாரி எடுத்து குளிக்க வைத்து
 புத்தாடை அணிவித்து, எண்ணெய் தேய்த்து, தலைசீவி பவுடர் போட்டு அழகு பார்க்கும் எண்ணம் வரவில்லையே!

உனக்கு விருப்பமானத்தை உனது சகோதரனுக்கு நீ வழங்கும் வரை நீ உண்மை விசுவாசியாக முடியாது என்பது  நபிமொழி. ஆனால் தனக்கு விருப்பமி;ல்லாத கழித்துப்போடும் துணிமணிகளைக் கூட பிறருக்கு அணியக்
 கொடுக்காமல் அவையனைத்தையும்  ஒர் உறைக்குள் தள்ளி தலையணையாக பரிணமித்துக் கொள்ளும் பண்பாட்டை நினைத்து சிரிக்கத்தான் தோன்றுகிறது.
     
நீச்சல் குளமொன்றில் நீச்சல் தெரியாத  ஒருவர் ஆபத்தில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கிறார். யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. நீண்ட நேரத்திற்குப் பின் ஒருவர்  உள்ளே குதித்து  பாடியைத் தூக்கி  வெளியே  கொண்டு வந்து போடுகின்றார். அவருடைய துணிச்சலையும் மனிதாபிமனாத்தையும் அங்கிருந்தோர் அதிகம் பாராட்டுகின்றனர். அப்போது ஒருவர் காப்பாற்றியவரை நோக்கி, அவர் குளத்தில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் போதே அவரை நீங்கள் காப்பாற்றியிருக்கலாமே, ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று வினவினார். அவர் பதில் சொல்லாமல்  அங்கேயிருந்த  இரு அறிவிப்புப் பலகையின்  பக்கம் சைகை காட்டினார். அதில் ஒன்றில் குளத்தில் விழுந்த வரை உயிருடன் தூக்கினால் 1000ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றிருந்தது. மற்றொன்றில் பாடியைத் தூக்கினால
;  10 ஆயிரம்  சன்மானம் வழங்கப்படும்  என போட்டிருந்தது. இது  தான்  இன்றைய  மனிதத்தின் எதார்த்தம் இது மாதிரியான  மனிதர்களை
  எண்ணுகிற போது  பிராணிகள்  எவ்வளவோ  மேல் என்று எண்ண தோன்றுகிறது. செப்டம்பர் 11 நியூயார்க்  உலக வர்த்தகக் கட்டிடம் தாக்கப்பட்ட போது  உள்ளே மாட்டிக் கொண்ட இரண்டு  கண்ணும்

 தெரியாத பீட்டி என்னும தன் எஜமானரை ரகசியப் பாதை வழியாக பாதுகாப்பாய் இடிபாடுகளிலிருந்து  காப்பாற்றிக் கொண்டு வந்ததாம் அவரது  நாய் ரோஸி . எஜமானரைக் காப்பாற்றிய நாய்; இரண்டாவது  முறை உள்ளே சென்று வெளியே  வரமுடியாமல்
இடிபாடுகளில்  சிக்கி இறந்து விட்டதாம் நாயிடம் உள்ள அந்த மனிதம் இன்று  நம்மில் இல்லாதது  துரதிருஷ்டமே.
என் மனதிலிருந்து கொட்ட  வேண்டிய உண்மையான எதார்த்தமான எல்லா  விஷயங்களையுமு; கொட்டி தீர்த்து விட்டேன்.
இதற்கு  நல்ல தீர்ப்பு  மனிதநேயம் வீழ்கிறதே! வீழ்கிறதே! வீழ்கிறதே என்று வழங்குவது  தான் மனிதாபிமான நடுவருக்கு அழகு! ஒரு கால்  தீர்ப்பு  மாற்றமாய் இருக்குமானால் என் அத்துணை வாதத்திற்கும் பதில் சொல்லாமல் நடுவர் வீடு போகக் கூடாது. போகவும் முடியாது. போகவும் விட மாட்டோம்.  இல்லை இல்லை  விட மாட்டீர்கள்.
ஆக மனிதநேயம் வீழ்கிறதே என்ற மக்களான உங்கள் தீர்ப்பே எங்கள் நடுவர் தீர்ப்பு என்று கூறி வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறி
பெறுகிறேன் விடை தருகிறேன் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து  லில்லாஹி  ரப்பில் ஆலமீன்