16 டிசம்பர், 2012

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்

வானம் வசப்படும்-1  (தன்னம்பிக்கை தொடர்)


தாழ்வு மனப்பான்மை வேண்டாம்


மற்றவர்களைவிட நாம் தாழ்ந்தவர்களோ என்ற சந்தேகம் நம் வாழ்வில் ஏற்படுவது சகஜம்தான். உலக மக்களில் 95 சதவீதத்தினர் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்கிறார் டாக்டர் 'மேக்ஸ் வெல்மால்ட்ஸ் '

தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள். பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் இவர்களில் உண்டு.
திறமை , தோற்றம், வாழ்க்கை முறை போன்றவற்றில் நம்மில் பலருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கு காரணம் சினிமா எனும் கனவுலக நாயகன் நாயகிகளுடன் நம்மை நாம் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான். அல்லது வசதி பெருத்தவர்களைப் பார்த்து நாம் ஏங்குவதுதான்.

இது தவறு. நீங்கள் நீங்கள்தான். எவருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய அவசியமில்லை.  இறைவன் தனது படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமையைத் தந்திருக்கிறான் உங்கள் வெற்றியை உங்கள் ஆற்றலுடன் ஒப்பிட்டு தீர்மானியுங்கள். உங்களிடமுள்ள திறமையை சிறப்பாகப் பயன்படுத்தினால் நீங்கள்தான் 'நம்பர் ஒன்'


நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்:


"انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ , وَلا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لا تَزْدَرُوا نِعَمَ اللَّهِ عَلَيْكُمْ  )مسند أحمد (
 ''
வசதியில் உங்களுக்கு கீழ்நிலையிலுள்ளோரைக் கவனியுங்கள்; மேல்நிலையில் உள்ளோரைக் கவனியாதீர்கள்; 
அப்போதுதான் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருள்வளங்களை குறைத்து மதிப்பிடாமல் இருக்க ஏதுவாகும்''
வெளிச்ச மனதுடனும் முகமலர்ச்சியுடனும் இருப்பவர்களைக் கவனி யுங்கள், எப்போதும் ஆக்க பூர்வமாகச் சிந்திப்பார்கள். நல்ல விடயங்களையே பேசுவார்கள். மற்றவர்களின் நற்பண்புகளை, திறமை களைப் பாராட்டுவார்கள். உறவுகளை மதிப்பார்கள், அவர்களின் உள்ளம் உயர்ந்திருப்பதினால் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதே இல்லை.

வீணான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் முழுக் கவனத்தையும் தங்கள் பணியில் செலுத்துவார்கள். ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் புதிய இலக்கை நிர்ணயித்து அதற்கு நேராய் செயல் படுவார்கள். உடனிருப்போரை யெல்லாம் மகிழ்ச்சியடையச் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களின் சிந்தையும் செயலும் ஆரோக்கியமாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை என்னும் நோய் அவர்களைத் தாக்குவதில்லை.

எழுந்து நடந்தால் 
எரிமலையும் சிரம் பணியும்
சோம்பிக் கிடந்தால்
சிலந்தி வலையும் உன்னை
சிறை பிடிக்கும்