04 அக்டோபர், 2012

உள்ளத்தை அள்ளும் இல்லம்

حج
''காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜு காட்சிக்கிணையாக உலகில் எதுவுமே இல்லை.''
இந்த வரிகள்தான் எவ்வளவு உண்மையானது!

இப்பொழுது உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்காவை நோக்கி ஹஜ்ஜுக்காக புறப்பட்டவண்ணம் இருக்கின்றனர்.

قال صلى الله عليه وسلم "إن الله عز وجل قد وعد هذا البيت أن يحجه كل سنة ستمائة ألف فإن نقصوا أكملهم الله عز وجل من الملائكة"
ஒவ்வொரு வருடமும் 6 லட்சத்திற்கு குறையாத மக்கள் ஹஜ்ஜுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் முடிவு செய்துள்ளான். ஒருவேளை குறைந்தால் வானவர்களிலிருந்து அந்த எண்ணிக்கையை பூர்த்தியாக்குவான்''.
ஆனால் இன்று 6 லட்சம் என்ன.. அதைவிட அதிகமாகவே மக்கள் திரளுகின்றனர். எனினும் அவர்களில் எத்தனை பேருடைய ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.
காரணம் ஹஜ் கபூலாவது என்பது அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொருத்தது.
இதோ அறிஞர் அலி இப்னு முவஃப்பிக் ரஹ் அவர்களின் வாக்குமூலத்தைக் கேளுங்கள்:
حججت سنة فلما كان ليلة عرفة نمت بمنى في مسجد الخيف فرأيت في المنام كأن ملكين قد نزلا من السماء عليهما ثياب خضر فنادى أحدهما صاحبه: يا عبد الله فقال الآخر: لبيك يا عبد الله "قال: تدري كم حج بيت ربنا عز وجل في هذه السنة? قال: لا أدري قال: حج بيت ربنا ستمائة ألف أفتدري كم قبل منهم? قال: لا، قال: ستة أنفس، قال: ثم ارتفعا في الهواء فغابا عني فانتبهت فزعاً واغتممت غماً شديداً وأهمني أمري فقلت: إذا قبل حج ستة أنفس فأين أكون أنا في ستة أنفس? فلما أفضت من عرفة قمت عند المشعر الحرام فجعلت أفكر في كثرة الخلق وفي قلة من قبل منهم؛ فحملني النوم فإذا الشخصان قد نزلا على هيئتهما؛ فنادى أحدهما صاحبه وأعاد الكلام بعينه ثم قال: أتدري ماذا حكم ربنا عز وجل في هذه الليلة? قال: لا، قال: فإنه وهب لكل واحد من الستة مائة ألف، قال: فانتبهت وبي من السرور ما يجل عن الوصف
மினாவில் இருக்கும்பொழுது ஒரு கனவு.அதில் இரு மலக்குகள் பேசிக்கொள்கிறார்கள்: இந்த ஆண்டு எத்தனை பேர் ஹஜ்ஜுக்கு வந்துள்ளனர் தெரியுமா?''
''தெரியாதே''
''6 லட்சம் பேர். அதில் எத்தனை பேரின் ஹஜ் ஏற்றுக்கொள்ளத் தகுந்தது தெரியுமா?''
''தெரியாதே''
''6 நபர்களின் ஹஜ் மட்டுமே''
கனவு கலைந்ததும் திடுக்கிட்டு விழித்து அழுதேன் கடும் கவலை ஏற்பட்டது. வெறும் 6 நபர்களில் நான் எங்கே இருக்கப்போகிறேன்؟''
அதன் பின் அரஃபாவில் தங்கியிருந்தபோது மறுபடியும் அதேபோன்று கனவு. ஆனால் இந்த முறை அந்த வானவர்களில் ஒருவர் கூறினார்:'' ஏற்றுக் கொள்ளத் தகுந்தது 6 நபர்கள்தான். ஆனால் அந்த 6 நபர்களில் ஒவ்வொருவரின் பொருட்டால் ஒரு லட்சம் பேரின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டான் இறைவன்.''
இந்த கனவு கண்டு நிம்மதி ஏற்பட்டது, அளவு கடந்த சந்தோஷம் உண்டானது.

பூமியின் நடுமத்தியில் இருக்கிற கஃபாவை நோக்கி மக்கள் அலைஅலையாக திரள்வதற்கு என்ன காரணம்?
அப்படி என்ன அங்கே இருக்கிறது? பரக்கத் பொருந்திய பூமி.
للذي ببكة مباركا
120 வகையான அருள்வளம் ஒவ்வொரு நாளும் இறங்கிக் கொண்டிருக்கிற புனித பூமி؛ அதில் 60 வலம் வருபவர்களுக்கு; 40 தொழுபவர்களுக்கு; 20 கஃபாவைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு.

وروى ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال "ينزل على هذا البيت في كل يوم مائة وعشرون رحمة ستون للطائفين وأربعون للمصلين وعشرون للناظرين"


உலகிலேயே முதன் முதலில் மனிதன் ஹஜ்ஜுக்காக புறப்பட்டது இந்தியாவிலிருந்துதான்.
ஆமாம். ஆதிமனிதன் ஆதம் அலை பூமிக்கு இறக்கபட்டது சரந்தீப் என்ற பகுதி. இது இப்போது இலங்கையில் இரு தாலும் அப்போது (குமரிக் கண்டம் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு) இந்தியாதான். ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அங்குதான் இறங்கினார்கள் என்பதற்கு அடையாளமாய் ஆதம் மலை இன்றும் அங்கு உள்ளது. அதன் மேலே அவர்களின் பாதச் சுவடு பதிந்திருக்கிறது. அதை தரிசிப்பதற்காக இஸ்லாத்திற்கு முன்பும் பின்பும் ஏராளமான அரபியர்கள் அங்கு வந்துள்ளனர். உலகம் சுற்றிய பயணிகளான மார்க்கோபோலா, இப்னு பதூதா போன்றோரும் அங்கு வந்து அதைப் பற்றி தங்கள் பயணக் குறிப்பில் எழுதியுள்ளனர்.
அங்கிருந்து ஆதம் அலைஹிஸ்ஸலாம் மக்காவிற்கு சென்று வானவர்கள் உதவியுடன் ஒரு ஆலயத்தை எழுப்பினர்.  அதுதான் கஃபா.
ஆக, மனிதன் தான் குடியிருப்பதற்கு வீடு கட்டுவதற்கு முன்பே முதன் முதலில் கட்டியது இறைவனுக்காக ஆலயம்தான்.

 إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا  
கஃபா
ஆதம் எழுப்பிய
 ஆலயம்
ஆகவே
ஆலயங்களின் ஆதம்.
 أن النبي صلى الله عليه وسلم قيل له : أي المسجدين وضع في الأرض أول ؟ المسجد الحرام أو المسجد الأقصى ؟ قال : { المسجد الحرام } . وذكر أنه كان بينهما أربعون عاما

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட மதினாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது மதினாவிற்கு 2 மைல் தொலைவிற்கு முன்பாக குபா எனும் இடத்தில் 4 நாட்கள் தங்கியிருந்தார்கள். இந்த நாட்களில் அருமையான பள்ளி ஒன்றை எழுப்பினார்கள். அதுதான் மஸ்ஜிது குபா.
லமஸ்ஜிதுன்.......................................
மதினாவிற்கு சென்ற பிறகும் நபி இதை மறக்கவில்லை. சனிதோறும் இந்த பள்ளிக்கு வருகை தந்து தொழுவது வழக்கம். அது மட்டுமல்ல இந்த பள்ளியில் இரண்டு ரக் அத் தொழுவது ஒரு உம்ராவிற்கு சமம்'' என்றார்கள்.
மதினா சென்றதும் முதலில் செய்தது அங்கும் பள்ளியை நிறுவியதுதான். இதன் மூலம் நபியவர்கள் நமக்கு சொல்வது இதுதான்: முஸ்லிம்கள் எங்கு இருந்தாலும் அங்கு அவர்கள் முதலில் செய்யவேண்டியது தொழுவதற்கு பள்ளி கட்டுவதுதான். மனிதன் இந்த பூமிக்கு வந்தது வசிப்பதற்காக மட்டுமல்ல; வணங்குவதற்காகத்தான் வாழ்க்கையையே வணக்கமாக ஆக்குவதற்குத்தான். 
இதை நம் முன்னோர்கள் சரியாக கடைபிடித்துள்ளார்கள்.
தென் ஆப்பிரிக்காவில் கேப்டவுன் என்று ஒரு நகரம் உண்டு. இதில் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அங்கு ஒரு புராதனமான தொன்மையான பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளி கட்டப்பட்ட பிண்ணனியைத் தேடிப் பார்த்தால் அதில் நமக்கு பெரிய படிப்பினை உண்டு.
பிரிட்டிஷார் பல நாடுகளையும் அடிமைப்படுத்தியது போல மலேசியாவையும் அடிமைப் படுத்தினர். ஆதிக்கத்திற்கு எதிராக ஆர்த்தெழுவது முஸ்லிம்களின் இரத்தத்தில் ஊறிப்போன இயல்பு. முஸ்லிம்கள் கடுமையாகப் போராடினர்.
அவர்களைக் கைது செய்த பிரிட்டிஷார் தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்த கேப்டவுனிற்கு கொண்டு வந்து அடைத்தனர். விலங்கிட்டு மிருகங்களை விட கேவலமாக நடத்தினர். கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இந்த முஸ்லிம்களுக்கு  தொழுவதற்கு ஒரு பள்ளி கட்ட உரிமையில்லை. ஏன்... தொழுவதற்கு கூட உரிமையில்லை. இதுதான் அவர்க்களை வாட்டியது. அவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வது கூட அவ்வளவு வருத்தமில்லை தொழமுடியவில்லையே என கண்ணீர் வடித்தார்கள். பகலெல்லாம் விலங்கு மாட்டி வேலை செய்யும் அவர்கள் இரவு கொஞ்சம் ஓய்வு எடுப்பதற்காக விலங்குகள் விடுவிக்கப்படுகிறபொழுது அந்த நேரத்தை வீணாக்க விரும்பாமல் தங்கள் முதலாளிகளுக்கு தெரியாமல் மலையடிவாரத்திற்கு சென்று தொழுவார்கள். அழுவார்கள். இந்நிலையில் ஒரு முறை டச்சுக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக படை எடுத்து வந்தனர். இப்பொழுது பிரிட்டிஷார் முஸ்லிம்களிடம் டச்சுக்காரர்களுக்கு எதிராக போரிடும்படி கேட்டுக் கொண்டனர். முஸ்லிம்கள் சொன்னார்கள்: எங்களைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் இருவருமே ஒன்றுதான்; எங்களை அடிமைப்படுத்தக் கூடிவர்கள்தான். உங்கள் இருவரில் யார் ஆண்டாலும் நாங்கள் அடிமைகளாக நடத்தப்படுவது உறுதி பிறகு ஏன் அவர்களை எதிர்த்து நாங்கள் போராடவேண்டும்?''
இல்லை நீங்கள் போராடி நாம் ஜெயித்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்.
அப்படியா! எங்கள் கோரிக்கை இதுதான் நாங்கள் தொழுகைப் பள்ளி கட்ட உரிமை வேண்டும். 
அதன் அடிப்படையில் போராடி வென்றார்கள். பள்ளி கட்டினார்கள். அதுதான் இன்றும் அங்கே உள்ள புராதனமான பள்ளி
வாழ்வதற்கே வழியில்லாமல் கொத்தடிமைகளாக வாடிக்கொகொண்டிருந்த நிலையிலும் அவர்கள் சொத்து கேட்கவில்லை. வீடு கேட்கவில்லை தொழுவதற்கு ஒரு பள்ளி வேண்டினார்கள். 
இன்று தடுக்கி விழுந்தால் ஒரு பள்ளி என்று தெருக்கள் தோறும் பள்ளி இருந்தும் அதுவும் பிரமாண்டமான வானளாவிய பள்ளிகளை போட்டி போட்டு கட்டியிருந்தும் தொழுவதற்குத்தான் ஆளைக் கானோம். 
நாம் ஊரில் இருக்கும்போது நம் மஹல்லா பள்ளியோடு முதலில் அழுத்த்மான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லாவான கஃபாவை சந்திக்க மனதில் உறுதி எடுக்கவேண்டும்.

ஹஜ்ஜு செய்ய பணம் தேவை என்பது உண்மைதான். ஆனால் அதை விட மனம் முக்கியம். மனதில் நீங்காத ஆசையும் தேட்டமும் இருந்தால் அல்லாஹ் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பான் என்பதற்கு ஏராள்மான சான்றுகள் உள்ளன.
பணம் இருந்தால் போதும் என்றால் உலகின் பெரிய பணக்காரனாக கருதப்பட்ட ஹைதராபாத் நிஜாமுதீனுக்கு ஏன்  ஹஜ் கிடைக்கவில்லை? 800 ஆண்டுகள் இந்த அகண்ட பாரதத்தை ஆண்ட முகலாய மன்னர்களுக்கு ஏன் ஹஜ்ஜுடைய வாய்ப்பு கிட்டவில்லை? எத்தனையோ அன்றாடக் காய்ச்சிகள் எல்லாம் ஹஜ் செய்ததாக படிக்கிறோமே என்ன காரணம்?
தேட்டமும் நாட்டமும்தான். ஹஜ் செய்வதற்கு லட்சங்கள் தேவைதான்; அதைவிட லட்சியம் அவசியம்.
ஒரு யூதப் பெண்மனியும் அவளது கிறிஸ்தவக் கணவரும் அமெரிக்கவில் வேலை பார்த்து வந்தனர். அவர்களின் கம்பெனி ஜித்தாவில் ஒரு கிளை ஆரம்பித்தது. அந்த கிளைக்கு இவர்களை இடமாற்றம் செய்தது. ஜித்தாவிற்கு வந்த அவர்கள் அங்கே ஒரு ஆச்சரியமான் காட்சியை கண்டனர். மனைவி கேட்டார்: 'ஏங்க லட்சக் கணக்கில் முஸ்லிம்கள்  எந்த ஏற்றத் தாழ்வுமின்றி ஜாதி இன வேறுபாடின்றி ஒரே (இஹ்ராம்) சீருடையில் கூட்டங்கூட்டமாக செல்கிறார்களே எங்கே?'' 
கணவர் விளக்கினார்: மக்காவில் ஒரு ஆலயம் உள்ளது. அதை தரிசிக்கத்தான்''
அப்படியா அதை நானும் பார்க்கவேண்டும். உலக முஸ்லிம்களின் வேற்றுமையை வேரறுத்துப்போட்டு சமத்துவத்தை நிலைநாட்டும் அந்த தலத்தை நானும் கண்டிப்பாக காணவேண்டும்''
அதெல்லாம் நடக்காது காரணம் ஹரம் எல்லைக்குள் கடும் கட்டுப்பாடு உண்டு. காஃபிர்கள் யாரும் நுழைந்துவிடமுடியாது. 
இல்லை.. எப்படியாவது அதைக் காண என் உள்ளம் துடிக்கிறது.
இருவரும் இஸ்லாமிய ஆடைகளை அணிந்துகொண்டனர். ஒரு காரில் மக்காவை நோக்கி பயணித்தனர். ஹரம் எல்லையில் சோதனைச் சாவடி வந்தது. அதைத் தாண்டி அந்நியர்கள் நுழைவது ரொம்ப கடினம். ஆனால் வர்களின் அதிர்ஷ்டமோ என்னவோ. அந்த நேரம் அங்கே கடுமையான டிராஃபிக் நெருக்கடி. சோதனைச் சாவடி அதிகாரிகளில் ஒருவர் சாப்பிடசென்றிருந்தார். மற்றொருவர் அந்த நெருக்கடியை சமாளிக்கமுடியாமல் சில விநாடிகள் வாகனங்களை உள்ளே அனுமதித்தார். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த தம்பதியர் உள்ளே நுழைந்தனர். அதற்குப் பிறகு நடந்தவற்றை அந்த பெண்மணியே கூறுகிறார்: நாங்கள் கஃபாவைக் பார்த்தோம்.. பார்த்தோம் பார்த்துக் கொண்டே இருந்தோம் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். இனம் புரியாத ஓர் உணர்வு என்னை ஆட்கொண்டது. உள்ளம் உருகி உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.  எனக்கு மட்டும்தானா என்று என் கணவரைப் பார்த்தேன் அவரும் அழுதுகொண்டிருந்தார். இப்பொழுது சத்தியம் விளங்கிவிட்டதா? என்று கேட்டேன். ''நன்றாக விளங்கிவிட்டது என்றார். நாங்கள் இருவரும் அந்த விநாடியே கலிமா சொன்னோம்.''

கஃபாவி தனிச்சிறப்பே இதுதான். கல்நெஞ்சனும் அதை நேரடியாக பார்த்தால் பார்த்த விநாடியே உள்ளம் உருகி கண்ணீர் வழிந்தோடும். 
கஃபாவை ஹாஜிகள் முதன் முதலில் பார்த்தவுடன் ஓடிச் சென்று அதன் திரையைப் பிடித்துக் கொண்டு தேம்பி அழுகின்ற காட்சி எப்படி இருக்கும் தெரியுமா? நீண்ட நாள் தாயைப் பிரிந்த ஒரு குழந்தை தன் தாயைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுமே அப்படி இருக்கும்.
கல்புகளைக் கவர்ந்திழுக்கும் காந்த சக்திகொண்டது கஃபா 
 وإذ جعلنا البيت مثابة للناس 
அந்த கஃபாவை மீண்டும் மீண்டும் தரிசிக்கிற பெரும் பேறை அல்லாஹ் நம் அனைவருக்கும் நஸீபாக்குவானாக
وقال صلى الله عليه وسلم "اللهم اغفر للحاج ولمن استغفر له الحاج

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!