02 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே -2


வாட்டி வதைக்கும் வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே என்று எங்கள் அணியினர் ஆதாரத்துடன் அடித்துப் பேசியும் இந்த மண்டையிலே மசாலா இல்லாத மரமண்டைகளுக்கு உரைக்கவில்லைனா என்ன செய்வது?
பத்துமாசம் சுமந்து பெற்றெடுத்த தாய்மார்களை எதிர்த்துப் பேச வந்திருக்கும் நன்றி மறந்தவர்களே! நன்றி கெட்டவர்களே!

நடுவர் அவர்களே! இவங்கள பார்த்தால் இருட்டுல புடிச்சு வச்ச கொழுக்கட்டை மாதிரி இருந்துக்கிட்டு எங்கள எதிர்த்து பேச வந்துட்டாக
الجنة تحت أقدام الأمهات                                                                                                                            
  

தாயின் காலடியில் சேயின் சொர்க்கம் என்று பெண்ணினத்தின் பெருமையை உயர்த்திப் பேசிய பெருமானாரின் மணி மொழியை மறந்துவிட்டீர்களா

திருமணம் சொர்க்கத்தில்; நிச்சயிக்கப்படுது என்பார்கள்.
''ஏங்க.. சொர்க்கத்திலயா நிச்சயிக்கப்படுது? ரொக்கத்திலும் சொக்கத் தங்கத்திலும் அல்லவா நிச்சயிக்கப்படுது?
இன்று நடுத்தரமான குடும்பத்துல ஒரு பெண்ணை கல்யாணம் முடிச்சுக் கொடுக்கணும்னா என்னவெல்லாம் கொடுக்கணும்னு தெரியுங்களா?

  • சொத்த மாப்பிள்ளையானாலும் சொக்கத் தங்கத்துல 25 பவுன் நகை.
  • வேலைவெட்டிக்கே போகாமல் ஊர் சுற்றித் திரியும் ஊதாரி மாப்பிள்ளைக்கு 50 ஆயிரம் பணம்
  • வாட்ச் வாங்க வக்கில்லாதவனுக்கு கைக்கு ஒரு வாட்ச்
  • விரலே இல்லாத விளக்கெண்ணைக்கு இன்ஷியல் போட்ட மோதிரம்.
  • நிச்சயதார்த்தம் அன்னைக்கு 100 பேருக்கு ஓசி பிரியாணி.
  • கல்யாணத்தன்னிக்கு சுத்தமான கிடாக்கறியிலே 500 பேருக்கு தண்டச்சோறு
  • சுத்த பேக்கு மாப்பிள்ளயானாலும் தேக்கு மரத்துல கட்டிலும் பீரோவும் கொடுக்கணுங்க
  • பண்டாரங்களுக்கு பாத்திரப் பண்டங்கள் வேற.
  • கல்யாணம் முடிஞ்சு குழந்தை பெறந்துச்சுன்னா குழந்தைக்கு காதுக்கு கழுத்துக்கு இடுப்புக்கு தங்கத்திலோ வெள்ளியிலோ போடனுங்க
  • சாதாரண நொண்டி மாப்பிள்ளைக்கே வண்டி வண்டியா கொடுக்கனும்னா படிச்ச பண்டார மாப்பிள்ளைக்கு எவ்வளவு கொடுக்கணும்? 

நடுவர் அவர்களே!
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான்
அப்படிப்பட்ட பெருமானார் திருமணம் முடித்திருக்கிறார்கள். எந்த மனைவியிடமாவது வரதட்சணை வாங்கியிருக்கிறார்களா? சீர் வரிசையாவது வாங்கியிருக்கிறார்களா? இல்லையே!

மார்க்கத்தின் மான்புகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு இந்த ஆண்கள் செய்யும் அக்கிரமங்களால் வாடி வதங்கும் பெண்கள் எத்தனை? கதிகலங்கிக் கிடக்கும் கன்னியர் எத்தனை? மனம் வெதும்பி அழுகின்ற மங்கையர் எத்தனை? தனக்கு ஒரு வரன் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் ஏழைக் குமர்கள் எத்தனை?
ஏ۔۔ வக்கற்ற வாலிபக் கூட்டமே! நீங்கள் வரதட்சணை வாங்கி வயிறு வளர்ப்பதில் சங்கடங்கள் சோகங்கள் உங்களுக்கு தெரியுமா? புனிதமிக்க இஸ்லாத்தில் பிறந்து இஸ்லாத்தில் வளர்ந்து வயதுக்கு வந்த ஏழைக்குமர்களை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர்கள் வரதட்சணை கேட்பதால் வேறு வழியில்லாமல் மாற்று மத இளைஞர்கள் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறேன் என கொக்கரிக்கு இளைஞர்களே! கண்ணியத்திற்குறிய பள்ளிவாசல் நிர்வாகிகளே! மார்க்கத்திற்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் உலமாப் பெருமக்களே!! இதற்கெல்லாம் தீர்வு காண்பது உங்கள் கடமை அல்லவா? ஆண்களாகிய நீங்கள் பொறுப்புகளை உணராததால்தான் இந்த வரதட்சணைக் கொடுமை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
ஆகவே புற்றுநோய் தொற்று நோய் போல பரவிகொண்டிருக்கும் இந்த வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே ஆண்களே என்று உறுதிபடக் கூறி என் உரைக்குத் திரையிடுகிறேன்.