27 ஜூன், 2012

அஃப்சர்: செல்வமே


அதிரடி பேச்சாளர் அஃப்சர்:
நடுவர் அவர்களே ! இன்று செல்வத்தின் அவசியத்தை அனைவருமே புரிந்து வைத்திருக்கிறோம். காசில்லாமல் காரியம் நடக்காது. அதனால்தான் அருமையாக பாடினான் ஒரு கவிஞன்:
‘’கையுக்கும் பையுக்கும் ஓட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் உன்னோடு.
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம் தாளங்கள் போடும் தன்னோடு.’’

நடுவர் அவர்களே நீங்கள் பிடித்திருக்கும் மைக்கு. நாம் நின்றுகொண்டிருக்கும் இந்த மேடை. ஏன்.. இவர்கள் அணிந்திருக்கும் ஆடை எல்லாமே காசு. இந்த அலங்காரம் இந்த தோரணம் எல்லாமே லேசு அல்ல காசு.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பெறவிருக்கின்ற பரிசுகள் கூட பணம் கொடுத்து வாங்கியது. பரமக்குடி கீழப்பள்ளி ஜமாஅத்தார்களும் மக்தப் தஃலீம் கமிட்டியும் வழங்கிய பணம் பரிசுகளாக இங்கே வந்துள்ளது. உங்களுக்கு பரிசு வேணுமா வேணாமா? வேணும் என்றால் பணம் தான் சிறந்தது என்று ஒப்புக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மேடையை விட்டு இறங்கி ஓடுங்கள்.

அருமையானவர்களே அழகான பழமொழி ஒன்று சொல்வார்கள். ‘’மனி இஸ் குட் சர்வெண்ட்’’ பணம் என்பது மனிதனுக்கு சேவை செய்யும் சிறந்த பணியாளன்
ஆம் சகோதரர்களே மனிதனின் தேவைகளை எல்லாம் அது முடித்துக் கொடுக்கிறது படிப்பு மட்டும் போதும் என்றால் நான் கேட்கிறேன். இன்று எத்தனையோ பட்டதாரிகள் வேலை இல்லாமல் வெட்டியாக அலைந்து கொண்டிருக்கிறார்களே என்ன காரணம்? ஆனால் பலபேர் பணத்தை வாரி இறைத்து பதவிகளில் கூட அமர்ந்துகொள்கிறார்கள்
பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்? பணக்காரனைப் பார்த்து உலகமே அஞ்சுகிறது. கவுரவிக்கிறது. எந்த வாசலாக இருந்தாலும் பணக்காரனைக் கண்டால் படாரென திறந்து விடுகின்றது. அவனுடைய புண்சிரிப்பைப் பெற எத்தனையோ முகங்கள் ஏங்கி நிற்கின்றன. அவனுடைய கனைப்பு சப்தம் கேட்டவுடன் எத்தனையோ கைகள் தானாக வணக்கம் போடுகின்றன; வந்தனம் செலுத்துகின்றன எனவே ஒரு நாடோ ஒரு தனிமனிதனோ உயர்வடைய வேண்டுமானால் தன் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
நடுவர் அவர்களே இவர்கள் பாவம். பத்தாம் பசலிகள்; உலகம் தெரியாதவர்கள்; இப்படித்தான் உளறுவார்கள். பணம் இருந்தால்தானே இன்று பெற்ற பிள்ளைகள் பெற்றோரை மதிக்கிறார்கள்
நான் ஒரு பெரியவரிடம் கேட்டேன் :
உங்களுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள் என்று?
அதற்குஅவர் சொன்னார்:'' எனக்கு மொத்தம் 3 son.''
''அப்படியா... அதுல உங்களுக்கு சோறு போடுறது எந்த  son ?
அவர் சொன்னார் :பென்சன்'. 
ஆக பெற்ற பிள்ளைகள் மூன்று  பேரும் அவருக்கு உதவல. அவர் வாங்குற பென்சன் தான் உதவுது.

அதனால்தான் ஒரு கவிஞன் பாடினான்:
''பானையில சோறு இருந்தா
பூனைகளும் சொந்தமடா..
பெட்டியில பணமில்ல
பெத்தபுள்ள சொந்தமில்ல''
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பணம் தேவைப் படுகிறது.
மனைவி மக்களைப் பட்டினி போடாமல் காப்பாற்றுவதற்கு. உற்றார் உறவினருக்கு உதவுவதற்கு. மஸ்ஜிதுகள் மதரஸாக்கள் கட்டுவதற்கு. மராமத்துகள் பார்ப்பதற்கு. வறுமையில் வாடுவோருக்கு வட்டியில்லா கடன் வழங்கி வளமாக வாழ வைப்பதற்கு.
இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்... செல்வத்தின் அவசியத்தை !
ஆகவே உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது செல்வமே என்று உறுதியுடன் கூறி என்னுரையை நிறைவு செய்கிறேன்.

நடுவர்:
ரொம்ப அருமையாக பேசினார் அஃப்சர்.
அவர் சொன்னார்: இன்று பணம் இருந்தால்தானே பெத்த பிள்ளைகளே பெற்றோர்களை மதிக்கிறர்கள் என்றார். இன்று அப்படித்தானே நடக்கிறது? அப்படித்தான் அன்னைக்கு ஒரு வாப்பாவும் மகனும் பேசிக்கிட்டாக: மகன் சொன்னான் வாப்பா.. என் கல்யாணத்துக்கு உன்னைக் கூப்பிடமாட்டேன் '' ஏண்டா கண்ணா?'' பின்னே உன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டியா?''
மேலும் அவர் சொன்னார்: பணம் பாதாளம் வரைக்கும் பாயும் பணம் பத்தும் செய்யும்; பணம் எதையும் சாதிக்கும் பணம் என்றால் பொணம்கூட வாயைப் பொளக்கும். இன்று அப்படித்தானே நடக்கிறது? படிப்பில் பாஸ் ஆகாதவன் கூட பணம் கொடுத்து பதவியில் அமர்ந்துவிடுகிறான். கைநாட்டு கூட தெரியாத கயவர்களெல்லாம் கல்வி அமைச்சர்களாக உலா வருகின்றனர். ஆக உயர்ந்த பதவிகளில் நம்மை உட்கார வைப்பது பணம்தானே என்று பேசியிருக்கிறார் அதை மறுத்து கருத்து சொல்ல வருகிறார் சகோதரர் அணுகுண்டுப் பேச்சாளர் அஜ்மல்கான்.
வாருங்கள் வந்து வார்த்தைகளைத் தாருங்கள்