27 ஜூன், 2012

அப்துல் அஜீஸ்: கல்வியே!

இடிமுழக்கப் பேச்சாளர்' அப்துல் அஜீஸ்:
நடுவர் அவர்களே! கல்விதான் உயர்வைத் தரும் என்று எங்கள் அணிவீரர் அடித்து சொல்லியும் இந்த மண்டையிலே மசாலா இல்லாத மக்குப் பசங்களுக்கு உரைக்கலைன்னா என்ன பண்ணுறது? நடுவர் அவர்களே! இந்த பணத்தாசை வந்துவிட்டால் நல்ல குணமெல்லாம் அப்படியே மாறிவிடும் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா? கைப்புண்ணுக்கு யாராவது கண்ணாடி பார்ப்பார்களா? அப்படித்தான் ஒரு வீட்டுல நஸிமாவும் ஜெஸிமாவும் பேசிக்கிட்டாங்களாம். அடியே ஜெஸிமா.. உன்னோட மாமியார்ட்ட இருந்து சாவிக்கொத்தை எப்படி கைப்பத்துனே?''
அதுவா.. அது ஒண்ணுமில்லடி நஸிமா.. திடீர்னு காக்கா வலிப்பு வந்தமாதிரி நடிச்சேனா.. உடனே என் மாமியார் சாவிக்கொத்தை எடுத்து என் கையிலே தந்துட்டா
பாருங்கள் நடுவர் அவர்களே! பணம் பணம் என்று அலைபவர்களின் நிலையெல்லாம் இப்படித்தான் இருக்கிறது. யாரை எப்படி ஏமாற்றலாம்? யாருக்கு குழி பறிக்கலாம்?
ஓ செல்வத்திற்கு வக்காலத்து வாங்க வந்திருக்கும் வாயாடிப் பசங்களே! நல்லா சொல்றேன் கேட்டுக்குங்க. பூட்டி பூட்டி சேர்த்து வைக்கிற செல்வம் ஒருபோதும் சிறப்பைத் தராது. நெருப்பைத்தான் தரும். ஆம். நரக நெருப்புக்குத்தான் நம்மை அழைத்துச் செல்லும் செல்வம். இதை நான் சொல்லவில்லை. நாயன் சொல்லுகிறான்:

أيحسب ان ماله أخلده
இந்த செல்வம் நிரந்தரமான வாழ்வைத் தரும் என்று எண்ணிக்கொண்டானா?
كلا لينبذن في الحطمة
அவ்வாறல்ல; நிச்சயமாக 'ஹுதமா' என்ற நரகத்திலே தூக்கி எறியப்படுவான்.
ஆக, சிறப்பு என்பது செல்வத்தைக் கொண்டல்ல; கல்வியைக் கொண்டுதான்.
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புகல்லாதவருக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு 
இந்த செருப்பு வாங்கத்தான் உதவும் உங்க செல்வம்;
சிறப்பு வேணும்னா அதுக்கு கல்வி வேணும்..புரியுதா?
அதுமட்டுமில்லை நடுவர் அவர்களே! கல்வி கொடுக்க கொடுக்க வளரும் காசு கொடுக்க கொடுக்க குறையும். இது எப்படி உயர்வுக்கு காரணமாக இருக்கமுடியும்? நாம் பேச்சு வழக்கில் சொல்வதுண்டு
'அதோ போறாரே அவரு 5 வருஷத்துக்கு முன்னாடி10 லட்சம் வச்சிருந்தாரு எல்லாம் செலவாகி இப்பநம்மகிட்ட வந்து டீ குடிக்க 10 ரூபா இருக்கான்னு
கேக்கறாரு' என்று சொல்வதுண்டு.
ஆனால் இப்படிச் சொல்லக் கேட்டதுண்டா:
'அதோ போறாரே அவரு 5 வருஷத்துக்கு முன்னாடி M.A. பட்டதாரியா இருந்தாரு; எல்லாம் செலவாகி இப்ப எட்டாம் வகுப்புக்கு எறங்கி வந்துட்டாரு'' அப்படின்னு எங்காவது சொல்லக் கேட்டதுண்டா?

கல்வி எவ்வளவு செலவழித்தாலும் பெருகிக் கொண்டே இருக்கும். அதுதானே உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக  இருக்கமுடியும்? நடுவர் அவர்களே இவங்க செல்வம் செல்வம்னு குதிக்கிறாங்களே.. செல்வம்னா என்ன தெரியுமா? அது செல்வமல்ல. செல்வோம் அதாவது செல்வோம் செல்வோம் சென்றுகொண்டே இருப்போம் ஒரு இடத்தில் ஒழுங்காக இருக்கமாட்டோம். செல்வத்துல ஒரு வகைதான் தங்கம். தங்கம்னா என்ன தெரியுமா அது தங்கமல்ல த்ங்கோம் அதாவது ஓரிடத்தில் தங்கமாட்டோம். இப்படி ஒரு நிலையில்லாத செல்வம் எப்படி உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கமுடியும்? அவர் பேசும்போது சொன்னார்: இந்த மேடை இந்த அலங்காரம் இந்த பரிசுப் பொருள் எல்லாமே காசு என்று. ஆமாம் காசுதான். யார் இல்லை என்று சொன்னது? ஆனால் இதுவெல்லாம் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? சும்மா பார்த்து ரசிக்கவா? மதரஸா மாணவர்களின் கல்வித் திறமையை வெளிப்படுத்துவதற்கு.!
இங்கே நீங்களெல்லாம் பல வேலைகளை விட்டுவிட்டு பலமணிநேரம் பொறுமையாக அமர்ந்திருக்கிறீர்களே எதுக்கு? சும்மா பந்தலைப் பார்த்துட்டு பந்தியை தின்றுட்டுப் போறதுக்கா? இல்லை. மாணவர்களின் அறிவுத் திறமையை அனுபவிப்பதற்கு!  இந்த அறிஞர்களின் கல்வி ஞானத்தை அள்ளிப் பருகுவதற்கு!!
அதைத்தான் ஃப்ராங்க்ளின் என்ற அறிஞன் சொன்னான்:
'' செல்வம் அது கல்விக்காக செலவழிக்கப் படுமானால் நல்ல பலனைத் தரும் ஆக, செல்வத்திற்கு சிறப்பு சேர்ப்பதே கல்விதான்
ஆகவே மனிதனின் உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது கல்வியே கல்வியே என்று உறுதியாகக் கூறி உரையை நிறைவு செய்கிறேன்.
நடுவர்:
சும்மா பிச்சு உதறிட்டார் நம்ம அப்துல் அஜீஸ். மூஸா நபியை இறைவன் இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்திற்கு அனுப்பி அலையவைத்தானே எதற்கு? கிள்ரு நபியிடம் டீ குடிக்க காசு வாங்கவா? அறிவைப் பெறுவதற்கு.!