27 ஜூன், 2012

அஜ்மல்: கல்வியே!

அணுகுண்டுப் பேச்சாளர் அஜ்மல்கான்:
நடுவர் அவர்களே நம்ம அண்டப் புளுகு அஃப்சர் பாய் வந்தாக முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி உண்மையை மறைச்சு பேசிட்டுப் போயிருக்காக. கல்வி அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை காசு இருந்தால் போதும் காரியத்தை சாதித்துவிடலாம் என்று சொன்னார். யார் சொன்னது?
‘’அரபு நாட்டுப் பயணத்திலும் படிப்பில்லாது பயனில்லை; அரசுப் பணிகளுக்கும் கல்வியின்றி வழியில்லை; மார்க்க கல்வி இல்லையென்றால் மறுமையிலே உயர்வில்லை; உலகக் கல்வி படிப்பதற்கு மார்க்கத்திலே தடை இல்லை; படிக்க வையுங்கள் தீனோரே படிக்க வையுங்கள் அன்பு மிக்க குழந்தைகள படிக்க வையுங்கள்’’

மேலும் அவர் சொன்னார் காசு இல்லை என்றால் பெத்த பிள்ளைகூட தகப்பனை மதிப்பதில்லை என்றார் நான் கேட்கிறேன்: அந்த பிள்ளைக்கு சின்ன வயதிலிருந்து காசைக் கொடுத்து காசைக் கொடுத்து ஊதாரித்தனமாக வளர்த்ததினால்தானே தகப்பனை மதிக்காத தான்தோன்றியாக திரிகின்றான் அதே சமயம் அந்த பிள்ளைக்கு சிறுவயதிலேயே முறையான கல்வி புகட்டி இருந்தால் தானும் உயர்ந்து தந்தைக்கும் பெருமை சேர்த்திருப்பானே என்னை மாதிரி.
நடுவர் அவர்களே தொட்டில் முதல் மரணக் கட்டில் வரை பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து மனிதன் கட்டாயம் பெறவேண்டிய ஒன்றுதான் கல்வி.
கற்கை நன்றே  கற்கை நன்றே  பிச்சை புகினும் கற்கை நன்றே  படிக்க காசில்லையா பிச்சை எடுத்தாவது படி ஒருபோதும் படிப்பை விட்டுவிடாதே எந்தளவு கல்வியைப் படிப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது பார்த்தீர்களா
நபியவர்களுக்கு நபிப் பட்டம் கிடைத்தவுடன் முதன் முதலில் அருளப்பட்ட வசனமே இக்ரஃ ஓதுவீராக என்பதுதான்
இறைவனின் முதல் உத்தரவே ஓது படி என்பதுதான். பொருளைத் தேடு செல்வத்தை சேமித்து வை என்று முதலில் சொல்லவில்லை. கல்வியைத் தேடு என்றுதான் சொல்கிறான்
திரைகடல் ஓடி திரவியம் தேடு என்று பெரியவர்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் பெருமானார் என்ன சொன்னார்கள்?

சீனா தேசம் சென்றேனும் சீரிய கல்வியைத் தேடுங்கள்/ சிங்கத்தின் வாய்க்குள்ளே கல்வி இருந்தாலும் அதைத் தேடிப் பெறுங்கள்'' என்று மிக அழுத்தமாக சொன்ன மார்க்கம். அந்த மார்க்கத்தில் பிறந்துவிட்டு இங்கே வந்து பணம் பணம் என்று கூவலாமா?
நடுவர் அவர்களே! அறிவு நமக்கு கிடைத்துவிட்டால் அனைத்துமே கிடைத்துவிட்டதாக அர்த்தம். அறிவு இல்லாமல் எத்தனை செல்வம் இருந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.

யாருக்கு கல்வி ஞானம் கிடைத்துவிட்டதோ அவருக்கு எல்லா பாக்கியங்களும் கிடைத்துவிட்டது. அதைத்தான் திருவள்ளுவர் கூட அழகாக சொன்னார்:
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனுமிலர்
நபி சுலைமான் (அலை) அவர்களிடம் அல்லாஹ் என்ன  கேட்டான்: நபியே உங்களுக்கு அறிவு வேண்டுமா? அதிகாரம் வேண்டுமா? நபி கூறினார்கள்: யா அல்லாஹ். எனக்கு அறிவு மட்டும் போதும் என்றார்கள். அல்லாஹ் சொன்னான்: இரண்டையுமே எடுத்துக்கொள்ளுங்கள். நீர் அறிவைத் தேர்ந்தெடுத்ததால் அறிவையும் தந்தேன் அதிகாரத்தையும் தந்தேன் என்றான். உலகத்தையே ஆட்சி செய்யும் அருமையான வாய்ப்பும் தகுதியும் எப்படி கிடைத்தது? அறிவைத் தேர்ந்தெடுத்ததால்தானே? நடுவர் அவர்களே! நாங்களும் அறிவு என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளோம். எங்களுக்கு உலகத்தின் ஆட்சி வேண்டாம். நல்ல தீர்ப்பைத் தந்தால் போதும்.
ரொம்ப வேண்டாம். யூசுஃப் நபி வரலாற்றை எடுத்துப் பாருங்கள். அவர்களின் அறிவுதான் அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. ஆரம்பத்திலே செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையிலே அடைக்கப்பட்டார்கள். அவர்களின் அறிவுதானே சிறையிலிருந்து விடுதலையாக்கியது? அரசர் கண்ட கனவுக்கு யாரும் பதில் சொல்ல முடியாமல் திணறியபோது அறிஞர் யூசுஃப் நபி அவர்கள்தானே கனவுக்கு விளக்கம் சொல்லி அந்த நாட்டுக்கு வந்த ஏழாண்டு பஞ்சத்தை அறிவுப் பூர்வமான ஆலோசனையால் தடுத்து வெற்றி கண்டார்கள். அதனால் சிறையிலிருந்து விடுதலையும் கிடைத்தது; சிம்மாசனமும் கிடைத்தது. ஆகவே அறிவுதான் உயர்ந்தது என்று அடித்துச் சொல்வேன்.
ஆகவே அருமையானவர்களே எல்லாவகையிலும் மனிதனின் உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது கல்வியே கல்வியே என்று உறுதியாகக் கூறி உரையை நிறைவு செய்கிறேன்.

சும்மா வெளுத்து வாங்கிட்டார் நம்ம அஜ்மல். அவர் சொன்னார்: சுலைமான் நபியின் உயர்வுக்கு காரணம் அவர்களின் அறிவல்லவா? யூசுஃப் நபியின் உயர்வுக்கு காரணம் கனவுக்கு விளக்கம் சொல்லும் கல்வியறிவல்லவா? இப்படி எத்தனையோ பேர் ஏற்றம் பெற்றதற்கு அவர்களின் கல்விதானே காரணமாக இருந்திருக்கிறது? அதற்கு மாறாக உலகின் பெரிய பெரிய பணக்காரர்களெல்லாம் இன்று என்ன ஆனார்கள்? காரூனின் செல்வம் என்ன ஆனது? அவனுடைய கணக்கற்ற கஜானாக்களும் கருவூலங்களும் இன்று பூமிக்குள்ளே புதைந்துகொண்டிருக்கிறதே..
அதுமட்டுமா? அபூலஹபைப் பற்றி அருள்மறை அல்குர்ஆன் என்ன கூறுகிறது?
ما اغني عنه ماله وما كسب
அவனுடைய செல்வம் அவனைக் காப்பாற்றவில்லை. எனவே செல்வம் ஒருபோதும் சிறப்பைத் தராது என்று பேசிவிட்டுப் போயிருக்கிறார். இல்லை செல்வத்தாலும் உயர்வு உண்டு என்று உரத்த குரலில் பேச வருகிறார் சரவெடிப் பேச்சாளர் முஹம்மது தவ்ஃபீக் அலி. வாருங்கள் வந்து மைக்கைப் பிடியுங்கள் அப்படியே இவர்களையும் ஒரு பிடி பிடியுங்கள். பிடிக்கிற பிடியிலே மேடை கிடுகிடுத்து ஆடவேண்டும்; இவர்களெல்லாம் துண்டக்காணோம் துணியக் காணோம் என்று ஓடவேண்டும்.