12 ஏப்ரல், 2012

உண்மையான மூமின் யார்-3


(3) வ அலா ரப்பிஹிம் யதவக்கலூன் இறைவனின் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்
•    அவன்மீது நம்பிக்கை வைப்பவர்களை அவன் கைவிடுவதில்லை
நபி (சல்) அவர்கள் ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்டினார்கள்: முன்வாழ்ந்த ஒரு சமுதாயத்தில் ஒருவருக்கு கடன் தேவைப்பட்டது. அவர் இன்னொரு செல்வந்தரிடம் கடன் கேட்டார் அவர் தருகிறேன் ஆனால் சாட்சிக்கு யாரையாவது அழைத்து வாரும்'' என்றார். அல்லாஹ்வே சாட்சியாக இருக்கப் போதும்.'' என்றார் அவர். ‘’சரி.. ஜாமீன் ஏற்க யாரையாவது அழைத்து வாரும்'' என்றார். அல்லாஹ்வே ஜாமீனாக இருக்கப் போதும்.'' என்றார் அவர். ‘’சரி நான் அல்லாஹ்வை நம்புகிறேன்’’ என்று கூறி ஆயிரம் பொற்காசுகளை கடன் கொடுத்தார். அவர் அதை வாங்கிக் கொண்டு கடல் பிரயாணம் செய்து தேவையான பொருளீட்டுக்கொண்டு குறிப்பிட்ட தவனைக்குள் திரும்பிவிட கப்பலைத் தேடினார் ஒரு கப்பலும் கிடைக்கவில்லை. எனவே அவர் ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும் அதற்குரியவருக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்து பின்னர் அந்த இடத்தை ஒழுங்காக மூடி மறைத்துவிட்டு கடலோரமாக அதைக் கொண்டுவந்து ''இறைவனே நான் இன்னாரிடம் ஆயிரம் பொற்காசுகளை கடன் கேட்டதற்கு அவர் சாட்சி கோரினார்; நான் உன்னையே சாட்சியாக்கினேன் அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அவர் என்னிடம் ஜாமீன் கோரினார் நான் அல்லாஹ்வே ஜாமீன் என்றேன் அதையும் ஏற்றுகொண்டார். அவர் சொன்ன தவனைக்குள் கடனை அடைத்துவிட நான் பயணத்திற்கு கப்பலைத் தேடினேன் கிடைக்கவில்லை. எனவே இந்த பணம் உள்ள மரக்கட்டையை உன் பாதுகாப்பில் அனுப்புகிறேன் அவரிடம் சேர்த்துவிடு'' என்று துஆ செய்து கடலில் அனுப்பினார். மறுகரையில் கடன் கொடுத்தவர் தவணை முடிந்ததும் தன் கடன்பொருள் ஏதும் கப்பலில் வந்திருக்கக் கூடும் என்று பார்ப்பதற்காக தம் ஊர் கடற்கரையோரமாக வந்து பார்த்தார் .அப்பொழுது திடீரென ஒரு மரக்கட்டை மிதந்து வருவதைக் கண்டார். விறகாகப் பயன்படும் என்று அதை எடுத்துக் கொண்டு வந்து உடைத்துப் பார்த்தபொழுது உள்ளே பணத்தையும் கடிதத்தையும் கண்டார். கடன் வாங்கியவருக்கு பின்னர் ஒரு கப்பல் கிடைத்து அவர் வந்து இன்னொரு ஆயிரம் பொற்காசுகளை  எடுத்துவந்தார். நான் கடலில் அனுப்பிய காசு கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. எனவே இதைப் பிடியுங்கள்'' என்றார். ''இல்லை நீர் அனுப்பியதை அல்லாஹ் என்னிடம் பத்திரமாக சேர்த்துவிட்டான்'' என்றார் அவர்.
                                  (புஹாரி)
எனது உம்மத்தில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள் என்று நபி அறிவித்தபோது அது யாராக இருக்கும் என்று பல கருத்துகள் தோழர்களுக்குள் நிலவியது. இறுதியில் நபியவர்களே வந்து அதற்கு விளக்கம் தந்தார்கள்: ''அவர்கள் மந்திரிக்கமாட்டார்கள்; சகுனம் பார்க்கமாட்டார்கள்; இறைவனின் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்''
''யாரசூலல்லாஹ்! என்னையும் அந்த கூட்டத்தில் சேர்க்க அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்'' என்று உக்காஷா (ரலி) வேண்டினார்கள். நபி துஆ செய்தார்கள். இன்னொரு தோழரும் வேண்டிக்கொள்ள, ''உக்காஷா இந்த விஷயத்தில் முந்திக்கொண்டார்.'' என்று நபி கூறினார்கள். இப்படி எல்லா தோழர்களும் ஆவல் கொண்ட அருமையான இந்த பாக்கியத்திற்கு தகுதி உள்ளவர்கள் யார் தெரியுமா?  இறைவனின் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள்தான்.
முதலில் வயிற்று வலி வந்தபொழுது அல்லாஹ்விடம் கேட்டு மூலிகையை பெற்று வயிற்று வலி குணமானதும் பின்னர் மற்றொருமுறை வயிற்று வலி வந்தபொழுது அல்லாஹ்விடம் கேட்காமல் நேரடியாக மூலிகையை நாடியபொழுது குணமாகவில்லை - அறிந்த சம்பவம்.

ஜக்கரிய்யா (அலை) அவர்களை எதிரிகள் துரத்திவந்தபொழுது அல்லாஹ்விடம் உதவி தேடாமல் மரமே என்னை ஒழித்து வைத்துக்கொள் என்று கூறியதால் அவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு நமக்கு ஒரு படிப்பினை.
நபிமார்களின் நம்பிக்கையை குறைகாணும் அளவுக்கு நமக்கு தகுதி அறவே இல்லை எனினும் நமது படிப்பினைக்காக அல்லாஹ்வே இப்படி அவர்களது வாழ்வில் சில நிகழ்வுகளை ஏற்படுத்துகிறான்.
(4) நான்காவது அம்சம்:
தொழுகையை நிலை நிறுத்துவார்கள்
தொழுவார்கள் என்று கூறவில்லை ; தொழுகையை நிலை நிறுத்துவார்கள். அதாவது விட்டு விட்டு தொழமாட்டார்கள் பொடுபோக்காக தொழமாட்டார்கள்; மன ஓர்மையின்றி கவனக்குறைவாக தொழமாட்டார்கள் அவர்கள்தான் உண்மையான மூமின் என்பதை இன்னொரு வசனமும் உறுதிப்படுத்துகிறது
கத் அஃப்லஹல் மூமினூன் அல்லதீனஹும் ஃபீ சலாத்திஹிம் க்ஹாஷிவூன்
சாதாரண ஒரு தலைவலிக்காக தொழுகையை விட்டுவிடுபவர்கள் நம்மில் உண்டு. உண்மையான மூமின்கள் உடலில் உயிர் ஓடிக்கொண்டிருக்கும் காலமெல்லாம் தொழுகையை விடத் துணியமாட்டார்கள். நபி (சல்) மரணப்படுக்கையில் அடிக்கடி மயக்கம் வந்து அல்லல் பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் கடும் காய்ச்சலினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் தொழுவதற்கு துடித்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு தோழர்களின் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டு தத்தி தத்தி நடந்து வந்து அபூபக்கர் (ரலி) ஜமாஅத் நடத்திக்கொண்டிருந்த தொழுகையில் கலந்து தொழுத நிகழ்வைப் படிக்கும் போதெல்லாம் கண்கள் கலங்குகின்றனவே.
பாச நபியின் பயிற்சிப் பாசறையில் பாடம் படித்து பக்குவம் பெற்ற பண்பிற்குரிய தோழர்கள் மாத்திரம் தொழுகையில் சளைத்தவர்களா என்ன? 
உமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்த தயாரானபொழுது வஞ்சகன் ஒருவன் குருவாளை எடுத்து குத்திவிட்டான் மயங்கிச் சரிகின்றார்கள். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கூறிய  முதல் வார்த்தை ''தொழுகை'' குடலில் குத்து விழுந்து கிழிந்துவிட்டதால் கொடுக்கப்பட்ட மருந்துகளெல்லாம் குடலில் தங்காமல் கீழே விழுந்து நிலைமையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருக்க உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அந்த இக்கட்டான நேரத்திலும் தொழுகை தொழுகை'' என்று துடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையிலும் இப்படி துடிக்கவேண்டுமா? என்று மற்றவர்கள் வினவியதற்கு, ''தொழாதவனுக்கு இஸ்லாத்தில் என்ன பங்கு இருக்கிறது? என்றார்கள்
ஈமானுக்கும் குஃப்ருக்கும் அடிப்படை வித்தியாசமே தொழுகைதான் என்று ஏந்தல் பெருமானார் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அவ்ரங்கசீப்(ரஹ்) ஒரு அற்புதமான அரசர். அரசியலில் ஈடுபட்டுக்கொண்டே ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கிய ஒரு இறைநேசர்.
முகலாயப் படைகளும் புஹாரா மன்னரான அப்துல் அஸீஸின் படைகளும் பல்க் சமவெளியில் சந்தித்தன. முகலாயப் படைக்கு தளபதி அவ்ரங்கசீப் (ரஹ்). கடும் போர் மூண்டது. போரின் உச்சக்கட்டம். லுஹர் நேரம் வந்ததும் போர்க்களத்தின் நடுவே அவ்ரங்கசீப் யானையிலிருந்து கீழே இறங்கினார் உளூ செய்தார். விரிப்பு ஒன்றை தரையில் விரித்து அமைதியாக தொழ ஆரம்பித்தார். எதிரிப் படைத்தலைவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். இந்த நிலையிலும் ஒருவர் மனஓர்மையுடன் தொழமுடியுமா? ஒரு பக்கம் யானைகள் பிளிறிக்கொண்டிருக்கின்றன; குதிரைகள் கனைத்துக்கொண்டிருக்கின்றன; ஆட்கள் அங்குமிங்கும் பாய்ந்து துவம்சம் செய்துகொண்டிருக்கின்றனர்; வாட்கள் பளிச் பளிச் என மின்னிக்கொண்டிருக்கின்றன; இந்த நிலையிலும் ஒருவர் மனஓர்மையுடன் தொழமுடியும் என்றால் அவர் சாதாரண மனிதர் அல்ல; மனிதப்புனிதர். இப்படிப்பட்ட மகானுடனா நாம் மோதிக்கொண்டிருக்கிறோம் என்று உடனே சமாதனம் செய்துகொள்கிறார். போர் நிறுத்தப்படுகிறது. கடுமையான நிலையிலும் கடமையை மறக்காத அவ்ரங்கசீப் அவர்களின் உறுதியான ஈமானால் பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிர் பலியாகாமல் காப்பாற்றப்பட்டது.


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இட்டுச் செல்லலாமே!