16 ஏப்ரல், 2012

டிவி நிஃமத்தே-2


நடுவர் அவர்களே! யானையைப் பார்த்த குருடர்கள் கதை தெரியுமா அதைப் போல இருக்கிறது இவர்களின் வாதம் நான்கு குருடர்கள் யானை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்களாம் ஒரு யானையை நிற்கவைத்து தொட்டுத் தடவி பார்த்தார்கள் ஒரு குரிடன் சொன்னான் இதோ நான் கண்டுபிடித்துவிட்டேன் யானை எப்படி இருக்கும் தெரியுமா ஒரு தூணைப்போல இருக்கும் என்றான் ஏனென்றால் அவன் பிடித்திருந்தது யானையின் கால்கள் அதை மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று அவன் முடிவுக்கு வந்தான் இன்னொரு குருடன் இல்லை இல்லை யானை என்பது ஒரு விளக்குமாறு போல இருக்கும் என்றான் அவன் கையில் அகப்பட்டது யனையின் வால். மற்றொரு குருடன் சொன்னான் அதெல்லாமில்லையப்பா.. யானை என்பது ஒரு சொளவு மாதிரி என்றான் அவன் கையில் அகப்பட்டது யானையின் காது. நான்காவது குருடன் யானையின் வயிற்றுப் பகுதியை தடவிக்கொண்டே சொன்னான் நீங்கள் சொல்வது போல இல்லையே யானை என்பது ஒரு பெரிய சட்டியைப் போலவல்லவா இருக்கிறது? என்றான் ஆக நான்கு பேருமே யானையை முழுசாப் பார்க்கல. அவனவன் கையில் அகப்பட்டதை வைத்து அரைகுறையாக புரிந்துகொண்டார்கள். அதுபோலத்தான் நடுவர் அவர்களே! எதிர் அணியினரும் ஏடாகூடமாக ஏதேதோ உளறுகிறார்கள். ஏதோ ஒருசில நிகழ்ச்சியை மட்டும் பார்த்துவிட்டு பதறுகிறார்கள் அய்யோ. டிவி முழுதும் ஆபாசம்; டிவி முழுதும் அனாச்சாரம் என்று புரியாமல் புலம்புகிறார்கள் 

நடுவர் அவர்களே மனித சமுதாயத்திற்கு அவசியமான அற்புதமான அருமையான எத்தனையோ தகவல்களை அள்ளி அள்ளித் தருகிறது டிவி பயனுள்ள சமையல் குறிப்புகளை செய்துகாட்டுகிறார்கள். பார்த்து பயன் பெறுகிறோம்; நாமும் அதுபோல நமது வீட்டிலே சமைத்து எல்லோரையும் அசத்துகிறோம்
ஒரு காலம் இருந்தது. குடும்பப் பெண்கள் சுவையான சமையல் குறிப்புகளை வீட்டிலுள்ள பாட்டிகள் வழியாக பரம்பரை பரம்பரையாக தெரிந்துகொண்டார்கள். ஆனால் இன்று அதைவிட அதிகமாகவே வகைவகையாக புதுமாடலாக எப்படியெல்லாம் சமைக்கலாம் என்பதை டிவி வழியாக தெரிந்துகொள்கிறோமா இல்லையா?
டிவி வந்து பிள்ளைகளை சோம்பேறியாக்கிவிட்டது என்று கூறினார்கள். நான் கேட்கிறேன் டிவியில் எத்தனை சேனல்களில் விளையாட்டு ஒளிபரப்பப்படுகிறது. அதைப் பார்க்கிற குழந்தைகளுக்கு நாமும் இப்படி விளையாடவேண்டும் என்ற வீரம் வராதா? எத்தனை சேனல்களில் உடற்பயிற்சி சொல்லித்தரப்படுகிறது? அதைப் பார்க்கிற குழந்தைகளுக்கு நாமும் இப்படி செய்யவேண்டும் என்ற வேகம் வராதா?
விளையாட்டை விடுங்கள் மார்க்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இன்றைய சூழலில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் டிவியிலே ஒளிபரப்பாகிறது கொள்கை விளக்கங்களாக இருக்கட்டும் படிப்பினை தரும் பாடங்களாக இருக்கட்டும் பல சேனல்களிலே பார்த்து மகிழுகிறோமே அது நன்மை இல்லையா? எங்கோ ஒரு இடத்திலே ஒரு அருமையான மாநாடு நடந்திருக்கும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ந்திருக்கும் அந்த நேரத்திலே அந்த இடத்திற்கு நாம் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனாலும் கவலைப்படத்தேவையில்லை. மறுநாள் அல்லது மறுவாரம் டிவியிலே அது ஒளிபரப்பப் படும்பொழுது அதை அப்படியே பார்த்து கேட்டு பயன் பெறுகிறோம். டிவி இல்லையென்றால் இது சாத்தியமாகுமா? கூறுங்கள் சகோதரர்களே! அதிலும்குறிப்பாக மாற்று மதத்தவர்களுக்கு நமது மார்க்கத்தை எடுத்துச் சொல்வதும் அதன் மகத்துவத்தை எத்திவைப்பதும் நமது முக்கியமான கடமை. அண்ணல் நபி (சல்) அவர்கள் 23 ஆண்டுகளில் ஏகத்துவ நெறியை எடுத்து வைத்ததற்குப் பிறகு இறுதிப் பேருரையிலே அரஃபாத் மைதானத்திலே கூடியிருந்த ஒன்றே கால் லட்சம் தோழர்களிடம் மிகவும் வலியுறுத்திக் கூறிய வார்த்தை என்ன தெரியுமா? என்னிடமிருந்து கேட்ட ஒரே ஒரு வாக்கியமாயிருந்தாலும் அதை பிறருக்கும் எடுத்துச் சொல்லிவிடுங்கள்'' இன்று இஸ்லாமிய சேனல்கள் மூலம் மார்க்கத்தின் மகத்துவம் சொல்லப் படுகிற பொழுது அதை ஒரே நேரத்தில் பல நாடுகளில் பல்லாயிரம் மக்கள் கண்டுகளித்து அதில் கணிசமானோர் கலிமா சொல்லி கண்ணியமிக்க மார்க்கத்தை தழுவிக்கொண்டிருக்கின்றனரே இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம் டிவியின் நன்மைகளை. ஆகவே டிவி ஒரு நிஃமத்தே என்று அடித்துச் சொல்லி அமருகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும். 

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இட்டுச் செல்லலாமே!