24 ஏப்ரல், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே-1


ஆடும் மலர்களிலும் அலைபாயும் கடல்களிலும் கூவுகின்ற குயில் குரல்களிலும் ஓங்கி ஒலித்திடும் வல்லவனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். செங்கதிரும் தன்மதியும் சேர்த்துக் கையில் தந்திடினும் எம் கொள்கை விடமாட்டேன் என்றுரைத்த ஏந்தல் நபியின் மீதும் நபிவழி நடந்திட்ட நற்றவத் தோழர்கள் மீதும் நாதாக்கள் மீதும் நம்மவர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் என்றென்றும் உண்டாவதாக


பெரியோர்களே! தாய்மார்களே! எங்களை எதிர்த்து பேசவந்திருக்கும் எதிர் அணியினரே! நியாயத்திற்கு கட்டுப்பட்டு தீர்ப்பு வழங்க காத்திருக்கும் கருப்பா இருந்தாலும் வெள்ள மனசுகொண்ட அருமையான நடுவர் அவர்களே!


சமுதாயத்தை வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் ஆண்களே என்று ஆதாரத்துடன் வாதாட வந்திருக்கிறேன்.


அருமையானவர்களே! அருள் மறையிலே அல்லாஹ் அழகாக சொல்கிறான்
 'அர்ரிஜாலு கவ்வாமூன அலன்னிசாயி ''
ஆண்கள் பெண்களின் பொருப்புதாரிகள் பெண்களின் நிர்வாகிகள் என்று அல்லாஹ் கூறியிருக்க அதை இந்த ஆண்வர்க்கம் மறந்துவிட்டு பெண்ணினத்தை சுரண்டி சுரண்டி சமுதாயத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்புள்ள நடுவர் அவர்களே இந்த ஆண்களின் அக்கிரமத்தைப் பற்றி ஒரு கவிஞன் இப்படி சொன்னான்
''ஒரு பெண்ணிடம் கைக்கூலி வாங்கின்ற கோழைகள்ஏன்தான் பிறந்தார்களோ?ஒரு தன்மானம் இல்லாத பிள்ளையைப் பெற்றோர்கள் ஏன் தான் பெற்றார்களோ?
அல்லாஹ்வின் சாபத்தைப் பெறுவதற்கா? இல்லை ஆயிரம் கன்னிகள் அழுவதற்கா?
என்று இந்த ஆண்களின் அக்கிரமத்தை சுட்டிக் காட்டியிருக்கிறான்.


ஆணவம் பிடித்து அலையும் இந்த ஆண்மக்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழிவுகளும் அவமானங்களும் சோதனைகளும் வேதனைகளும் கொஞ்சமா நெஞ்சமா?
அப்பப்பா! அப்பப்பா! நினைத்தாலே நெஞ்சம் உருகுகிறது; கண்கள் கலங்குகிறது


தமிழகத்தில் பிரபலமான ஒரு ஊரில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த பாவப்பட்ட பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தார்கள். சீவிமுடித்து சிங்காரித்து அழகுப் பதுமையாய் வந்து நின்றாள் அந்த மணப்பெண். ஆனால் வெக்கங்கெட்ட மாப்பிள்ளை வீட்டார் நகையும் தொகையும் எவ்வளவு தருவீர்கள் என்றுதான் கேட்டார்கள். 50 பவுனும் 50 ஆயிரமும் கண்டிப்பாய் வேண்டுமென்று கண்டிஷன் வைத்தார்கள். அவ்வளவு எங்களால் முடியாது என்று பெண்வீட்டார் சொன்னதுமே வைத்திருந்த பலகாரங்களை தின்று தீர்த்த அந்த பண்டாரங்கள் இடத்தைக் காலிசெய்துவிட்டு போய்விட்டார்கள். 


அடுத்த மாதம் இன்னொரு மாப்பிள்ளை வீட்டார் என்னும் கொள்ளைக் கூட்டம் வந்து பேரம் பேசிவிட்டு சென்றது. ஒருமுறையல்ல இருமுறையல்ல.. பலமுறை மாப்பிள்ளை வீட்டாருக்கு முகத்தைக் காட்டி காட்டி வெறுத்துப்போன அந்த ஏழைப்பெண் ''அட என்னடா வாழ்க்கை.. வந்தவனெல்லாம் வக்கனையாய் தின்றுவிட்டு வாழவைப்பதற்கு காசு கேட்கிறானே' என்று மனம் நொந்து தூக்குக் கயிறு மாட்டி உயிரை விடுகிறாள். 


இந்த கோர நிகழ்வை அறிந்த பெற்றொர்கள் துக்கம் தாளமுடியாமல் கதறி கதறி அழுகின்றனர். ஆசைஆசையாய் தாலாட்டி சீராட்டி வளர்த்தெடுத்த தன் மகள் பருவ வயதில் தாலிக் கயிறு ஏறுவதற்கு பதிலாக தூக்குக் கயிறு ஏறிக் கிடக்குதே என்று ஏங்கி ஏங்கி ஒரு கட்டத்தில் அவர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
அச்சச்சோ.. அச்சச்சோ.. என்ன கொடுமை என்ன கொடுமை ஒரு குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக நாசமாக்கிய மகாப் பாவிகள் இந்த மாப்பிள்ளை வீட்டார்.
இந்த லட்சணத்தில் இந்த மானங்கெட்ட மாப்பிள்ளைகள் பெண்களை எதிர்த்து பேசவந்திட்டாங்க  


நடுவர் அவர்களே இந்த மூன்று அரைவேக்காடு ஆண்கள் .. இவங்க முழிக்கிற முழியைப் பாருங்க. திருவிழாவுல காணாமப் போன ஆடுமாதிரி... 
மே.. மே..மே..
அடப்பாவிகளா.. அடப்பாவிகளா.. இந்த பெண்களெல்லாம் எவ்வளவு பெரிய தியாகி தெரியுமா? பத்துமாதம் சுமந்துபெற்றெடுத்த தாயைப் பிரிந்து பாசத்தைக் கொட்டி வளர்த்த தந்தையைப் பிரிந்து அண்ணனைப் பிரிந்து தம்பியைப் பிரிந்து அக்காவை விட்டு த்ங்கையை விட்டு ஊரை விட்டு உறவை விட்டு கட்டிய கணவனே பெரிது என்று உன் காலடியில் கிடக்கிறாளே உன் அன்பு மனைவி உன் வாழ்க்கைத் துணைவி அவளைக் காப்பாற்றவேண்டியுள்ள ஆண்களே பெண்ணிடம் வரதட்சணையைப் பிச்சையாகக் கேட்டு வாங்கி பெண்ணினத்தை நாசத்தின் படுகுழியில் தள்ளி சமுதாயத்தின் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்களே இது நியாயம்தானா? பாவப்பட்ட பெண்களின் வயித்தெரிச்சல் உங்களை சும்மா விடுமா?


அருமையானவர்களே! அல்லாஹ் தன் திருமறையிலே சொல்லிக் காட்டுகிறான்:
''திருமணம் முடிக்கும் ஆண்களே மணப்பெண்ணுக்கு மனமுவந்து மஹர்த் தொகையை அள்ளிக் கொடுங்கள்'' என்று அல்லாஹ் சொல்லியிருக்க،
கன்னிப் பெண்ணைக் கரம்பிடிக்க காசு கேட்பது என்னங்கய்யா நியாயம்? கரும்பு தின்ன கூலி கேட்கலாமா? 

  • காசு கொடுத்தால் கழுதைக்கும் தாலி கட்டும் கண்றாவிகள் ஆண்கள்.
  •  பணம் பணம் என்று உச்சரித்து பெண்வீட்டாரை நச்சரித்து பணம் தராவிட்டால் கல்யாணமே நடக்காது என்று எச்சரித்து பெண்களை நாசமாக்கியவர்கள் ஆண்கள்
  • தன்மானத்தை இழந்து தரங்கெட்டு நடப்பவர்கள் ஆண்கள் 
  • கல்யாணச் சந்தையிலே ஆடுமாடுகளைப் போல் விலைபோகக்கூடியவர்கள் ஆண்கள் 
  • எல்லாவற்றுக்கும் மேலாக மறுமையை மறந்து திருமணத்தை தீமையாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஆண்கள்

ஆகவே. வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் ஆண்களே! ஆண்களே!! என்று உறுதிபடக் கூறி உரைக்குத் திரையிடுகிறேன். நன்றி வஸ்ஸலாம்.