24 ஏப்ரல், 2012

வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே -1நடுவர் அவர்களே
எனக்கு முன்னால் பேசிய சகோதரி கண்டதையெல்லாம் உளறிக் கொட்டிவிட்டு போயிருக்கிறார். முழுப் பூசனிக்காயை சோத்துல மறைக்கிறமாதிரி உண்மையை மறைச்சு பேசியிருக்கிறார். ஆற்றல்மிக்க ஆண் சமுதாயத்தை அவமானத்திப் பேசிச் சென்றிருக்கிறார். நடுவர் அவர்களே! நீங்க ஆணா? பெண்ணா?

சரி அது போகட்டும். அவுங்க பேசும்போது தமிழகத்திலொரு குடும்பம் தற்கொலை செய்துகொண்டதாகவும் அதுக்கெல்லாம் காரணம் ஆண்கள்தான் அப்படின்னு சொன்னானாங்க. நான் கேட்கிறேன் உலகத்துல எங்கேயாவது மாமனார் மருமகன் சண்டையை கேள்விப்பட்டிருக்கீங்களா/? ஆனால் எங்கே பார்த்தாலும் ஒரே மாமியார் மருமகள் சண்டைதான். இதை உங்களால மறுக்கமுடியுமா?

ஓ முக்காடு போட்டு முழிக்கும் முண்டாசுகளே! நல்லா சொல்றேன் கேட்டுக்குங்க. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை என்னாலே காட்டமுடியும்.
மாமியார் என்ற பணப் பேய்கள் ஒரு பெரிய உதாரணம். உங்களுக்கு மட்டும்தான் உண்மைச் சம்பவம் சொல்லத் தெரியுமா? நானும் ஒரு உண்மைச் சம்பவம் சொல்றேன் கேளுங்கம்மா கேளுங்க.

தமிழகத்தில் ஒரு பிரசித்த பெற்ற ஊரில் தன் மகனுக்கு லட்ச ரூபாய் ரொக்கமும் சொக்கத் தங்கம் இருபது பவுனும் கறாராய்ப் பேசி தன் மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்க்கிறாள் மாப்பிள்ளையின் தாய். 15 பவுன் நகையைப் போட்டுவிட்டு மீதி நகையை பிறகு தருகிறோம் என்று சொன்னதைக் கேட்ட மாமியார் என்ற பெண்பிசாசு ''அப்படியென்றால் இந்த சம்பந்தமே வேண்டாம்'' என்று பேயாட்டம் போடுகின்றாள். எல்லாம் ஒருவழியாக சமாதானம் ஆகி திருமணம் நடக்கிறது. கல்யாணம் முடிந்து சில நாட்கள்தான். மீதி 5 பவுனை எங்கே எங்கே என்று அந்த மணப்பெண்ணை நச்சரித்து கொடுமைப் படுத்துகிறாள் மாமியார். சில மாதங்கள் கழிகிறது. புதுப்பெண்ணும் கர்ப்பிணி ஆகிறாள். பாவம் வயிற்றில் கருவை சுமக்கிறாளே என்று கூட பார்க்காமல் அவளின் தலைமுடியைப் பிடித்திழுத்து மீதி நகையை தரவக்கில்லாத உனக்கு குழந்தை ஒரு கேடா'' என சொல்லி வயிற்றில் எட்டி உதைக்கிறாள் கல்னெஞ்சம் படைத்த அந்த மாமியார். கர்ப்பிணியான அந்த மருமகள் அந்த உதையைத் தாங்கமுடியாமல் மயங்கி கீழே விழுகிறாள். அப்படியும் ஆத்திரம் அடங்காமல் அந்த ராட்சசி மாமியார் மயங்கிக் கிடக்கும் மருமகளை அடித்து உதைத்து இரண்டு கால்களையும் பிடித்து தரதரவென இழுத்து சமையலறைக்குள் கொண்டுபோய் மண்ணெண்ணையை ஊற்றி உயிரோடு கொழுத்துகிறாள்.
என்ன கொடுமை. என்ன அக்கிரமம்.. 5 பவுன் நகைக்காக ஒரு கர்ப்பிணியை உயிரோடு கொழுத்திய மகாப்பாவி மாமியார் என்ற பெண்தானே. நடுவர் அவர்களே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இதுபோல எத்தனையோ கொடுமைகள் பெண்களால்தான் நடந்துகொண்டிருக்கின்றன. அம்மா தாய்மாரே.. கொஞ்சம் அடக்கி வாசிங்க. ரொம்ப பேசினீங்கன்னா ஒரு பய கூட உங்கள கட்டமாட்டான்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்பின்து பரக்கத்துன்'' பெண் குழந்தை ஒரு பரக்கத்*தாகும் என்று. ஆனால் இன்று பெண்களே பெண்களை மதிப்பதில்லை. ஆண்குழந்தை பிறந்தால் ஆயிரம் ஆயிரம் ஆனந்தம் அளவிலா சந்தோஷம். முகமெல்லாம் சிரிப்பு. அதே நேரத்தில் பெண்குழந்தை பிறந்துவிட்டால் போதும் அந்த அம்மாவின் முகம் வாடி வதங்கி சுருங்கிப் போய்விடுகிறது. தலைமேல கைவச்சு உட்கார்ந்துடுவாங்க. பெண்களாகிய நீங்களே பெண்களை மதிப்பதில்லை. குற்றம் செய்வது நீங்கள்; பழி போடுவது எங்கள் மீதா? பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா?
 இன்றைக்கு சமுதாயத்துல வரதட்சணை வாங்கமாட்டோம் என்று எல்லா ஆண்களும் சேர்ந்து முடிவெடுத்தாலும் இந்த வீணாப்போன பொம்பளைங்க விடமாட்டாங்க நடுவர் அவர்களே. எப்படி கேட்கிறீங்களா?
நான் இந்த மேடையிலே சவால் விடுறேன். நல்லா குறிச்சு வச்சிக்கிருங்க. நான் வரதட்சணை வாங்காம கல்யாணம் முடிக்க தயார். ஆனா இந்த சமுதாயம் என்ன சொல்லும் தெரியுமா? 'பொழைக்கத் தெரியாதவன்'.  குறிப்பா இந்த பொம்பளைங்க என்ன சொல்வாங்க தெரியுமா? ''அடியே.. மாப்பிள்ளைட்ட ஏதோ கொறை இருக்குடி.. அதேன் கைக்கூலி வேணாம்கிறார்''.
ஆக, திருந்த நினைக்கும் எங்களை திருந்தவிடாம தடுக்கிறது யாரு? பெண்கள்தான்! ஆகவே, வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே பெண்களே என்று கூறி அமர்கிறேன்.
 -----------------------------------------------------------------------------------------------
 *பரக்கத்:அருள்வளம், பாக்கியம்.