31 மார்ச், 2012

டிவி முசீபத்தே-3

நடுவர் அவர்களே!
எனக்கு முன்னால் பேசிய சகோதரி டிவியிலே எந்த ஆபத்தும் இல்லை என்றும் அது பொழுதுபோக்கு என்றும் பீலா விட்டுட்டு போயிருக்கார். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஆரம்பத்தில் சினிமா ஒரு பொழுதுபோக்காகத்தான் அறிமுகமானது. ஆனால் காலம் மாற மாற காட்சிகளும் மாறிப்போனது. இப்பொழுது முழுக்க முழுக்க ஆபாசமாகவும் அனாச்சாரமாகவும் உருவெடுத்து உருக்குலைந்து நிற்கிறது. கதையிலே ஆபாசம்; காட்சியிலே ஆபாசம்; பாட்டிலே ஆபாசம் பேச்சிலே ஆபாசம் உடையிலே ஆபாசம் உதட்டிலே ஆபாசம் இப்படி எல்லாமே ஆபாசமயம். கடைசிக் காலத்திலே அறிவு மங்கிவிடும்; ஆபாசம் மிகைத்து விடும் என்று அண்ணலார் சொன்னார்களே அதற்கு முக்கிய கருவியாக அமைந்திருப்பது இந்த டிவிதான். அப்படி இருக்க டிவி ஒரு நிஃமத்து என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்கூறுங்கள் நடுவர் அவர்களே

இன்று டி வியினாலும் சினிமாவாலும் சீர்கெட்டுப் போவதிலே மற்றவர்களைக் காட்டிலும் மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அன்றாட பாடங்களை உச்சரிக்கவேண்டுய அவர்களின் உதடுகள் சினிமாப் பாடல்களை முனுமுனுத்துக்கொண்டிருக்கின்றன. நாட்டு நடப்புகளை விட நடிகர் நடிகைகளைப் பற்றியே அதிகம் தெரிந்து வைத்துள்ளனர். ஒரு புதுப் படம் வெளியாகிறதென்றால் மாணவ மாணவிகளின் உள்ளங்களை முதன்முதலாக கவருவது அதில் நடிக்கும் நடிகர்களின் ஆபாச உடைகளே! அது எவ்வளவு அலங்கோலமாக அவலட்சணமாக இருந்தாலும் அதுதான் அன்றைய ஃபேஷன்.

 அதுமட்டுமா? நம்மிலே பலருக்கு நம்முடைய பிறந்த தேதி காலம் தெரியாது ஆனால்,
  •  எந்த நடிகை எங்கு பிறந்தாள் எந்த நடிகனுக்கு என்ன வயது? அவன் குலம் என்ன கோத்திரமென்ன? இவர்கள் எத்தனை படங்களில் நடித்துள்ளார்கள்அவர்களின் உடை என்ன? நடை என்ன? ஸ்டைலென்ன? இவை அத்தனையும் புள்ளி விபரமாக தெரிந்து வைத்துள்ள புள்ளிராஜாக்கள் நம்மில் எத்தனையோ பேருண்டு.
இவ்வளவு பற்றும் பாசமும் பைத்தியமும் நடிகர்கள் மீது வைத்திருப்பதால்தானே அங்கங்கே இந்த கூத்தாடிகளின் பெயரால் மன்றங்களும் சங்கங்களும் சபைகளும் ஆயிரக்கணக்கிலே அதிகரித்துவிட்டன. இந்த கூத்தாடிகள்தான் நமது வாழ்விற்கு வழிகாட்டிகளா? இந்த நடிகர்கள்தான் நம்மை செம்மைப் படுத்தும் சீர்திருத்த செம்மல்களா? சிந்தித்துப் பாருங்கள்.

''நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது ''என்று அல்லாஹ் கூறுகிறான். நபியின் முன்மாதிரியை விட்டுவிட்டு நடிகர்களின் முன்மாதிரியை பின்பற்றுகிறோமே இதுதான் நாளை மறுமையில் நம்மைக் காப்பாற்றுமா? இந்த இழிநிலைக்கு நம்மை ஆளாக்கியது எது? டிவி என்ற அரக்கனல்லவா?

சிலர் வீட்டிலே டி.வி வாங்கிவைக்கிறார்கள் எதற்காக ? செய்திகளை பார்க்கலாமே நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளலாமே என்று.  ஆனால் அந்த வீட்டின் பெண்மனிகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

 நடுவர் அவர்களே! நான் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். பெரும்பாலும் பெண்கள் நாடகத்தில்தான் மூழ்கிக் கிடப்பார்கள் என்று பார்த்தால் அந்த பெண்மணி அதிசயமாக செய்தி பார்த்துக்கொண்டிருந்தார். பரவாயில்லையே இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? என்று ஆச்சரியப்பட்டு அந்த பெண்ணிடம் கேட்டேன்: ஏம்மா இவ்வளவு நேரம் செய்தி பார்த்தீர்களே என்ன சொன்னாங்க? அதற்கு அந்த அம்மணி சொன்ன பதிலென்ன தெரியுமா? ''செய்தியா.. அந்த கண்றாவியை யார் பார்த்தது? செய்தி வாசிச்ச அந்த பெண்ணையல்லவா நான் நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். ஆஹா !என்ன அழகான புடவை கட்டியிருந்தாள்! கழுத்துல நகை அம்புட்டும் சுத்தமான தங்கம். டிசைன் டிசைனா வளையல்.. எம் புருசனுந்தான் இருக்கார்.. என்னத்த வாங்கித் தந்தார்?'' என்று புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இப்படித்தான் நடுவர் அவர்களே! நாட்டிலே நடக்குது.

 டி.வியிலே தோன்றும் பெண்களின் அலங்காரத்தைப் பார்த்து நாமும் அதேபோல வாங்கணும்; உடுத்தணும் அலங்கரிக்கணும் என்று ஏங்குகிறார்கள். கணவன் கஷ்டப்பட்டு அனுப்புகிற காசையெல்லாம் கண்டதையும் வாங்கி கரியாக்குகிறார்கள். இந்த ஊதாரித்தனத்தாலும் நாதாரித்தனத்தாலும் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டன. இதற்கு அடிப்படைக் காரணம் எது? டி.வியில் வரும் பொய்யான விளம்பரக் காட்சிகள்தானே. விளம்பரத்தில் பார்த்ததையெல்லாம் விலைக்கு வாங்கவேண்டும் என்று நினைப்பதால் வீண்விரையம் அதிகமாகிவிட்டது.
 இத்தனை சீரழிவுக்கும் காரணமான டி.வியை நல்ல சாதனம் என்று சொல்ல நாவு கூசுகிறது நடுவர் அவர்களே நாவு கூசுகிறது. ஆகவே டி.வி ஒரு பயங்கரமான முசீபத்துதான் என்று கூறி எனது வார்த்தைகளுக்கு திரையிடுகிறேன்.
                          ------------------------------------

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இட்டுச் செல்லலாமே!

இது தொடர்பான இதர பதிவுகள்: