27 ஜனவரி, 2012

டிவி நிஃமத்தே-3அருமையான பெரியவர்களே!
 பொறுமையான தாய்மார்களே!
 மன்பவுல் ஹசனாத் மதரசாவில் ஓதும்
 சிங்கக் குட்டிகளே தங்கக் கட்டிகளே ! டிவி ஒரு நிஃமத்துதான் என்று பேசவந்துள்ளேன்۔
 நடுவர் அவர்களே! சாமானியமாக கிடைக்காத பெரும் பாக்கியமெல்லாம் மிக லேசான முறையில் நமக்கு கிடைக்கச் செய்வது இந்த டிவி.
 என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் சகோதரர்களே! மூன்று விஷயங்கள் இருக்கின்றன..அவற்றைக் கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே நன்மை என்று மாநபி (சல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று என்ன? 


1. அருள்மறை குர்ஆன்: கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே நன்மை; அதை ஓதினாலோ அதைவிட நன்மை.
2. கஃபா:  கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே நன்மை; அதை வலம் வந்தாலோ அதைவிட நன்மை.
3. பெற்றெடுத்த தாய்: தாயைக் கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே நன்மை; அவளுக்கு பணிவிடை செய்தாலோ அதைவிட நன்மை. ஆக கஃபாவைக் கண்ணால் காண்பதே பெரும் பாக்கியம் என பெருமானார் (சல்) கூறியிருக்கிறார்கள்.


 நான் கேட்கிறேன் நடுவர் அவர்களே! உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்; கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறேன்; இதோ மேடையேறிப் பேசிய இந்த மேதாவிகளைப் பார்த்துக் கேட்கிறேன்: உங்களில் மக்காவுக்குச் சென்று கஃபாவைக் கண்ணால் கண்டவர் எத்தனை பேர்? கை தூக்குங்கள் பார்க்கலாம். இப்படிக் கேட்டால் ஏதோ ஒன்றிரண்டு பேர்தான் கை தூக்குவர். இல்லையென்றால் அதுவும் இல்லை. ஆனால் அதே கஃபாவை டிவியிலே பார்த்தவர்கள் கண்டு ரசித்தவர்கள் கைதூக்குங்கள் என்றால் நான் உள்பட நடுவர் உள்பட அத்தனை பேரும் கைதூக்குவோம். இப்போது சொல்லுங்கள் நடுவர் அவர்களே! உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் கஃபாவைப் படம் பிடித்துக் காட்டுகிற இந்த டிவி முசீபத்தா?


அதுமட்டுமல்ல நடுவர் அவர்களே! அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வாரந்தோறும் வருகின்ற வசந்தங்கள் அவை. எத்தனையோ ஏழைகளின் வாழ்க்கையிலே ஏற்றம் பெறுகிற வாய்ப்பை மக்கள் அரங்கம் வழங்குகிறது.

  •  வறுமையிலே வாடி வதங்கும் வறியவர்கள்;
  •  படிப்பதற்கு பணம் இல்லாத பரம ஏழைகள்;
  •  தொழில் தொடங்க தோதில்லாமல் துவண்டு கிடப்பவர்கள்;
  •  முன்னுக்கு வரமுடியாமல் மூலையிலே முடங்கிக் கிடப்பவர்கள்
 இப்படி எத்தனையோ வறியவர்களுக்கு வாரி வாரி வழங்குகிறார்கள். அதுமட்டுமா? அந்த நிகழ்ச்சியிலே,

  •  உடல் ஊனமுற்றவர்கள்,
  •  கண் பார்வை இழந்தவர்கள்,
  •  காது கேளாதவர்கள்,
  •  ஏன் தாய் த்ந்தையை இழந்த அனாதைகள்கூட
 மேடையேறிப் பேசுகிறார்கள். எப்படி தெரியுமா? தங்களது வாழ்க்கையிலே அவர்கள் எப்படி முன்னுக்கு வந்தார்கள்? எதிர்ப்புகளை எப்படி சமாளித்தார்கள்? என்பதையெல்லாம் அவர்கள் சொல்லிக் காட்டும்போது அதைப் பார்க்கிற நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
உடல் ஊணமுற்ற அவர்களே வாழ்க்கையில் சாதிக்கிறபோது நன்றாக இருக்கிற நாம் ஏன் சாதிக்க முடியாது? இப்படியெல்லாம் ஒரு துணிவும் துணிச்சலும் ஏற்படுகிறது.. அரட்டை அரங்கத்தைப் பார்க்கிறபோது.! 


அதையெல்லாம் எங்கே பார்க்கிறாங்க இவங்க? அரட்டை அரங்கம் நடக்கும் பொழுது குறட்டை விட்டல்லவா தூங்குகிறார்கள்? அதனால்தான் அதன் அருமை தெரியவில்லை. 
 நடுவர் அவர்களே! இந்த 21-ம் நூற்றாண்டில் டிவியின் மூலம் எத்தனையோ நன்மைகளும் பலன்களும் கிடைத்துக்கொண்டிருப்பதை மறுக்க முடியுமா? ஆகவே டிவி என்பது சமுதாயத்திற்கு கிடைத்த ஒரு அற்புதமான நிஃமத்துதான் என்று கூறி என் உரைக்குத் திரையிடுகிறேன்


இது தொடர்பான இதர பதிவுகள்: