05 டிசம்பர், 2011

ஜும்ஆ என்பது சும்மா இல்லை...வெள்ளிக் கிழமை : சிறந்த நாள்
 "சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்கத்தில் தங்க வைக்கப் பட்டார்கள். உலக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி 450) 
سيد الأيام يوم الجمعة، وأعظمها عند الله، وأعظم عند الله من يوم الفطر ويوم الأضحى، وفيه خمس خصال : خلق فيه آدم، وأهبط الله فيه آدم إلي الأرض، وفيه توفي الله عز وجل آدم، وفيه ساعة لا يسأل الله العبد فيها شيئاً إلا آتاه الله إياه ما لم يسأل حراماً، وفيه تقوم الساعة، ما من ملك مقرب ولا أرض ورياح ولا بًحْر ولا جبال ولا شجر، إلا وهن يشفق من يوم الجمعة
 • இது நாட்களின் நாயகம் (ஸய்யிதுல் அய்யாம்) என அழைக்கப்படுகிறது.
 • அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியமுள்ள ஒருநாள்........ 
 • மலக்கு மலை மரம் பூமி காற்று உட்பட அனைத்துமே இந்த நாளை பிரியப்படுகின்றனர்
 • இதை வானவர்கள் யவ்முல் மஸீத் (பெருகும் நாள்) என்று அழைக்கிறார்கள். அதற்குகாரணம் நபி கேட்டதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்: சுவனத்தில் கஸ்தூரியை விட மணமான ஓர் இடம் உள்ளது. மறுமையில் 'வெள்ளிக் கிழமை தோறும்' அல்லாஹ் இங்கு சுவனவாசிகளுக்கு காட்சி தருகிறான்.  
 • கஅபுல் அஹ்பார் (ரலி) கூறினார்கள்: ஊர்களில் சிறந்தது மக்கா. மாதங்களில் சிறந்தது ரமளான். நாட்களில் சிறந்தது வெள்ளி.
 • வெள்ளிதோறும் பறவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் ஒன்றையொன்று சந்தித்து ''சலாம் சலாம்; யவ்முன் ஸாலிஹ்'' என்றுவாழ்த்தை பறிமாறிக் கொள்கின்றன.     (இஹ்யா)
இந்த உம்மத்தின் தனிச்சிறப்பு
அல்லாஹ் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் வெள்ளிக்கிழமையாகும். யூதர்களுக்கு சனிக்கிழமை புனித நாள் என்றால்கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும்.நாம் காலத்தால் பிந்தியவர்கள் என்றாலும் அவர்களின் புனித நாளை விட நமது புனித நாள்தான் முதலில் வருகிறது
"இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி 3486, முஸ்லிம் 1414)]
 • இந்நாளில் நரகிலிருந்து 6 லட்சம் பேரை விடுதலை செய்யப் படுகிறது.
 • இந்நாளில் மரணிப்பவர் ஷஹீதுடைய நன்மை வழங்கப்படுகிறார்;
 • கப்ருடைய வேதனையிலிருந்து விதிவிலக்கு பெறுகிறார் (இஆனா)

இந்நாளில் என்ன செய்ய வேண்டும்?
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ 
 ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
 ''நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.'' (அல்குர்ஆன் 62:9)
"ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 342, திர்மிதி 198)
"ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவுனமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
யாருக்கு கடமை?
'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜும்ஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
உதயமா ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்:

 1. குளித்தல்.மற்றும் சுத்தம்
 "ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி 883)

கிழக்கு வெளுத்ததிலிருந்து ஜும்ஆவுக்குப் போகும்வரை எந்த நேரத்திலாவது குளிக்கலாம். அது சுன்னத்து முஅக்கதாவாகும். ஆனால் ஜும்ஆவுக்கு நெருக்கமான நேரத்தில் குளிப்பது ஏற்றமாகும்..
 • ஜும்ஆவிற்கு செல்கிறவன் அழகிய உடையணிந்தும், நோன்பில்லாதவன் கண்ணுக்கு தோன்றாத மணம் பூசுவதும், தாடியை ஒதுக்கி முகவேலை செய்து மூக்கு, அக்குள் ஆகியவற்றின் முடிகளைக் களைந்து, நகம் வெட்டிக் கொள்வதும் சுன்னத்தாகும்.
 • தாடியை சரிபடுத்தி சீப்பைக் கொண்டு சீவுவதும், ஒற்றைப்படையாகக் கண்களுக்கு சுருமாக்ககோலால் சுருமா இடுவதும், தனக்குத் தகுதியான தலைப்பாகை கட்டுவதும், அதைப் பின் பக்கத்தில் தொங்கவிடுவதும் சுன்னத்தாகும்.

''ஜும்ஆ நாளில் தலைப்பாகை அணிந்திருப்பவர்களுக்கு இறைவன் அருள்புரிகிறான்; மலக்குகள் துஆ செய்கின்றனர்.என்றும் தலைப்பாகையுடன் ஜும்ஆவை நிறைவேற்றுவது தலைப்பாகை இல்லாமல் 70 ஜும்ஆ தொழுவதை விட சிறந்தது.'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இஆனாவில் ஒருகுறிப்பு உண்டு.

 1. கஹ்ப் அத்தியாயத்தை ஓதுதல்.

من قرأ سورة الكهف يوم الجمعة، سطع له نور من تحت قدمه إلي عَنان السماء يضيء به يوم القيامة، وغفر له ما بين الجمعتين 
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அவர் பாதத்திலிருந்து வானம்வரை பிரகாசம் தோன்றுகிறது. மறுமையிலும் அந்த ஒளியுடன் வருவார்
 • ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( ஹாகிம்)
 • வெள்ளி இரவில் கஹ்ப் அத்தியாயத்தை ஓதினால் காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் துஆ செய்கின்றனர்.தொழுநோய் போன்ற பெரும் வியாதிகள் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாக்கப்படுவான். என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்..
ஸலவாத்து அதிகம் கூறுதல்

''உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்" என்று பதிலளித்தார்கள். (அபூதாவூத் 883)
முதல் நேரத்திலே, நடந்து சென்று, இமாமை அண்மித்து மஸ்ஜிதில் அமருதல்
யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நஸயீ 1381)
இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்ததிலிருந்து மதியம் வரையிலுள்ள நேரத்தை ஆறு பகுதிகளாக பிரித்து அதன் முதல் பகுதியிலிருந்து இறுதி பகுதிவரைக்கும் ஜும்ஆவிற்கு வரும் நபர்களுக்குகிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் பதிவேட்டை சுருட்டி வைத்துவிட்டு போதனையைக் கேட்கின்றார்கள்" என்று கூறினார்கள். (புகாரி 881)
இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?
"ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1416)
நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.
 துஆ ஏற்றுக்கொள்ளப்டும் நேரத்தை கருத்தில் கொண்டு அதிகம் துஆ செய்தல்.
 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள். (புகாரி 935)
அறிஞர்களுக்கு மத்தியில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அந்த நேரம் பற்றி 20க்கும்மேற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளன. பின் வரும் கருத்துக்களை நான் சிறப்பாக கருதுகிறேன்:
 • ஜும்ஆ நாளின் கடைசி நேரம்:
நிச்சயமாக ஜும்ஆ தினத்தில் ஒரு நேரம் உள்ளது அதில் ஒருவன் நன்மையானதை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அதை அவன் வழங்காமல் இருப்பதில்லை. அது அஸருக்கு பின் உள்ள நேரமாகும். (அஹ்மத்).
மற்றொரு அறிவிப்பில்:

ஜும்ஆவுடைய தினத்தில் அஸருக்குப் பின் உள்ள கடைசி நேரத்தில் அதை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ (அபூதாவுத், நஸாயி).

ஆயிஷா (ரலி)  அஸருக்கு பின் உள்ள இறுதி நேரத்தில் (சூரியன் மறைவிற்கு சற்று முன்பு) துஆவில் பிரத்தியேகமாக ஈடுபடுவார்கள்.
 • இமாம் மிம்பரில் அமர்ந்ததிலிருந்து தொழுகையை நிறைவேற்றும் வரை உள்ள நேரமாகும். (முஸ்லிம்)தொழுகைபத்து நாட்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படல்.

பலனை இழந்து விடக் கூடாதுய மைகளைப் பறித்து விடும் நச்சுக் கிருமிகள்
"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடுஎன்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்" என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி 934)
"யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ
 அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்" என்று ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.முஸ்லிம் 1419)
''மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.
இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கவும் செய்யலாம்.
மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.என்றுநபி (ஸல்) கூறினார்கள்' (அபூதாவூத் 939)
ஜும்ஆ முடிந்த பின்….
 ஜும்ஆ தொழுகை முடிந்து காலை மாற்றி அமரும் முன்பாக அல்லது யாரிடமும் பேசும் முன்பாக ஸூரத்துல் பாத்திஹா, இக்லாஸ், பலக், நாஸ் ஸூராக்கள் ஆகியவற்றை ஏழு ஏழு முறை ஓதினால் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்படும். மூமின்களின் எண்ணிக்கையளவு நன்மைகள் வழங்கப்படும். அவரது தீன் துன்யா குடும்பம் குழந்தைகள் ஆகியவற்றை அல்லாஹ் பாதுகாப்பான்
ஜும்ஆ தொழாவிட்டால்...?
 • சாபம் இறங்கிவிடும்

அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜும்ஆ தொழுகை நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.
 • இதயங்கள் இறுகி விடும் 
"ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!" என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். (முஸ்லிம் 1432)
"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.( திர்மிதி 460)
 • இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும்
"ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்ததுஅவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டுஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணுகிறேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1043)

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக!